வெயிட்டிங் லிஸ்ட்: ரயில்வே நிர்வாகத்தின் சிறந்த முடிவு
காத்திருப்பு பட்டியல் ரயில் டிக்கெட்டுகளுக்கு அளவு நிர்ணயிப்பது என்று ரயில்வே வாரியம் எடுத்த முடிவின் அடிப்படையில், மொத்த டிக்கெட்டில் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை மட்டுமே காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வது என்ற திட்டத்தை ரயில்வே அதிகாரிகள் அமல்படுத்த முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
பெரும்பாலான நேரங்களில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் 20 முதல் 25 சதவீதம் வரை இருக்கை உறுதி செய்யப்படுவதால், இந்த அளவை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேவை அதிகம் உள்ள தடங்களில் இயங்கும் ரயில்களில் 10 சதவீதம் பேருக்கு கூட காத்திருப்பு பட்டியல் டிக்கெட் கடைசி நேரம் வரை உறுதியாவதில்லை என்பதே கண்கூடான காட்சி.
காத்திருப்பு பட்டியல் டிக்கெட் வைத்திருப்போர் கடைசி நேரம் வரை பயணம் உறுதியாகுமா என்ற சந்தேகம் நிலவுவதால், பயணத் திட்டத்தில் ஏற்படும் குழப்பத்தை மனதில் கொண்டும் ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. ரயில் பயணம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே பயணிகள் பட்டியல்(சார்ட்) தயாரித்து வெளியிடப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். கடைசி சில மணி நேரத்துக்கு பதிலாக ரயில் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாகவே உறுதி செய்யப்பட்ட பயணிகள் பட்டியலை தயாரித்து வெளிடுவது குறித்தும் ரயில்வே திட்டமிட்டு வருவது பாராட்டுக்குரியது.
காத்திருப்பு பட்டியல் டிக்கெட் எடுத்த பயணிகள் அவசரமாக பயணம் செய்ய வேண்டுமென்றால் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஆனால், பலர் படுக்கை வசதி, ஏசி பெட்டிகள் என எதையும் விட்டு வைக்காமல் உள்ளே நுழைந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றன.
வட மாநிலங்களில் சிலர் கதவு, ஜன்னல்களை உடைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டிகளில் உள்ளே நுழையும் காட்சிகள் காணொலி வாயிலாக வெளிவந்தன. இதுபோன்ற அடாவடி சம்பவங்களுக்கு 25 சதவீதம் டிக்கெட் வரையறை முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பயணிகள் நலன்காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் ரயில்வே நிர்வாகம் டிக்கெட் முன்பதிவில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது, பேருந்துகளின் மொத்த இருக்கையும் காட்சிப்படுத்தப்படுகிறது. அதில், முன்பதிவு செய்யப்பட்டவை, காலியாக இருப்பவை, மகளிருக்கு ஒதுக்கப்பட்டவை என்பதைப் பார்த்து நமக்கு தேவையான இருக்கையை முன்பதிவு செய்ய முடியும்.
சினிமா திரையரங்கு டிக்கெட்டுகளும் அதே முறையில் முழுமையாக காட்சிப்படுத்தப்படுகிறது. நமக்கு தேவையான இருக்கையை நாம் தேர்ந்தெடுக்க முடியும். அதேபோன்று, ரயிலில் உள்ள மொத்த இருக்கை மற்றும் படுக்கைகள், காலியாக உள்ள படுக்கைகள், முன்பதிவு செய்யப்பட்டவை எவை என்பது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது காட்சிப்படுத்தப்பட்டால், பயணிகள் தங்களுக்கு தேவையானவற்றை பதிவு செய்து கொள்ள முடியும். இதன்மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
