Last Updated : 18 Jul, 2018 12:44 PM

 

Published : 18 Jul 2018 12:44 PM
Last Updated : 18 Jul 2018 12:44 PM

மண்டேலா: அன்பின் பாதையில் அடக்குமுறையை வென்றவர்!

கறுப்பின மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தென்னாப்பிரிக்காவில் காலனியாதிக்கம் ஏற்படுத்திய விளைவுகளைச் சரியாக்க இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகக்கூடும். கறுப்பின மக்களை இப்போதும் அடிமைகளாகப் பாவிக்கும் போக்கு உலகின் பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. ஆதிக்கம், அடிமை என இரு துருவங்களிலான மனப்போக்கைக் களைவதிலும், நிறபேதமற்ற தென்னாப்பிரிக்காவை உருவாக்கிய வரலாற்றிலும் மண்டேலா பதித்த தடங்கள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் துணிச்சலோடு தொடர்ந்து செயலாற்றியதன் மூலம், வரலாற்றில் ஒரு நிலையான இடம்பிடித்தவர் மண்டேலா.

27 வருட சிறை வாசத்தைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்றார். அவரது குடும்பத்தில் முதன்முறையாகப் பள்ளிக்குச் சென்றவர் மண்டேலாதான். வழக்கறிஞர். காந்தியப் பார்வை கொண்டவர். வன்முறையின் மீது நம்பிக்கை வைத்தவர் என்றாலும், ஒருகட்டத்தில் அன்பு வழியையே தன் லட்சியப் பாதையாகத் தேர்ந்தெடுத்தவர்.

‘சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை’ என்ற நெல்சன் மண்டேலா, காந்தியைத் தனது முன்னுதாரணமாகக் கொண்டு செயலாற்றியவர். காந்திய அரசியல் சிந்தனைகளைப் பின்பற்றி தமது பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைவர்களில் மார்ட்டின் லூதர் கிங்குக்கும், நெல்சன் மண்டேலாவுக்கும் முதன்மையான இடம் உண்டு. ‘கோபம் வரும்போது அது போகும்வரை சிரிப்பதுதான் சரியான வழி அல்லது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற மன்னிப்பின் மகத்துவத்தை உணர்த்திய தலைவர்களைத் தேடிப் பெற வேண்டும்’ என்கிறார் குர்சரண் தாஸ். அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானது.

இந்தியா மீது கொண்ட பிணைப்பைத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கிறார் மண்டேலா. விடுதலையான பின்னர், 1990-ல் அவர் முதன்முறையாக இந்தியா வந்தார். பன்னெடுங்காலமாகச் சிறையில் கழித்த பிறகு, அவர் வந்த முதல் அயல்தேசம் இந்தியா. அப்போது, இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியர் அல்லாத ஒருவர் பாரத ரத்னா விருது பெறுவது அதுதான் முதல்முறை. மனித உரிமைக்கான உலகளாவிய வழக்கறிஞர் என்று போற்றப்பட்ட நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் அதிபரான அடுத்த ஆண்டு இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி 100 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக மண்டேலா அறக்கட்டளைக் கண்காட்சியை இந்தியா நடத்தியது. நெல்சன் மண்டேலா இறந்த நாளன்று இந்தியாவில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. காந்திய வழியைப் பின்பற்றியவர், இந்தியாவோடும் இந்தியர்களோடும் நெருங்கிய உறவுகொண்டிருந்தவர் என்ற வகையிலும், இனபேதத்துக்கு எதிராக அவர் முன்வைத்த கருத்துகள் நம் சூழலுக்கும் பொருத்தமானவை என்ற வகையிலும் மண்டேலா நமக்குக் கூடுதல் நெருக்கமானவராகிறார்.

கறுப்பின மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது தென்னாப்பிரிக்கா. 1652-ல் டச்சுக்காரர்கள் தென்னாப்பிரிக்காவுக்குள் நுழைந்தார்கள். பிறகு ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என தென்னாப்பிரிக்காவின் வளங்களுக்காகப் பெருமளவிலான ஆதிக்கத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. விளைவாக, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் அடிமைகளாகவும், இனதுவேஷத்துக்குப் பலிகடாவாகவும் ஆகிறார்கள். கறுப்பினத்தவர்களை மேலும் மேலும் ஒடுக்கும் விதமாக சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

சொந்தமாக நிலம் இல்லாத நிலையே பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, கறுப்பினத்தவர்கள் தண்டிக்கப்படும் சூழல் உருவானது. வழக்கறிஞராக இருந்த மண்டேலாவைத் தேடிவந்த மக்களின் துயரார்ந்த கதைகள் போராட்டத்தின் பக்கம் அவரை இழுத்தன. 1950-ல் இனத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை வகைப்படுத்தப்பட்டது. கறுப்பர்கள், வெள்ளையர்கள் எனப் பிரிப்பதற்கு சட்டமியற்றப்பட்டது. கறுப்பர்களை மேலும் ஒடுக்குவதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டத்துக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தலைமைப் பொறுப்பேற்று முன்னெடுத்ததன் மூலம் தென்னாப்பிரிக்க வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் தனது அரசியல் பிரவேசத்தை நிகழ்த்தினார் மண்டேலா. மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக்கொண்டு வெளியேற்றிய வெள்ளையின அரசின்

நடவடிக்கைக்கு எதிராகவும், கறுப்பினத்தவர்களுக்குப் பாதகமான கல்வித் திட்டங்களுக்கு எதிராகவும் என மண்டேலாவின் போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. 1960-ல் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்காவைத் தவிர்க்கும் அளவுக்கு அரசியலில் நெருக்கடியான சூழல் உருவானது. மண்டேலாவின் தொடர் போராட்டங்களும், 1994-ல் அவர் அதிபரானதும் தென்னாப்பிரிக்காவுக்கு மறுபிறப்பாக அமைந்தது.

1994, ஏப்ரல் 24-ல்தான் முதல் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றது. மண்டேலா அதிபரான அந்த முதல் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறார்கள். தென்னாப்பிரிக்காவைப் பல இன ஜனநாயகமாக முன்னெடுப்பதில் முனைப்புடன் தன் வாழ்க்கையைக் கொடுத்த மண்டேலாவுக்கு இன்று 100-வது பிறந்தநாள். மண்டேலா தனது சிறைவாசத்தின் பெரும்பகுதியைச் செலவிட்ட ரோபென் தீவிலிருக்கும் சிறையைப் பார்வையிட ஒவ்வொரு வருடமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகைபுரிகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் ‘சுதந்திர நீச்சல்’ என மண்டேலாவைக் கொண்டாடுகிறார்கள். லண்டனில் மண்டேலாவின் நூற்றாண்டுக் கண்காட்சி, ஜோஹன்னர்ஸ்பெர்க்கில் உலகக் குடிமக்கள் திருவிழா, போர்ச்சுகலில் இசை அஞ்சலி என உலகின் பல்வேறு பகுதிகளில் மண்டேலாவின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நமது வாழ்வைக் கட்டமைத்ததில் வரலாற்றுக்கு இருக்கும் பங்கை மறந்துவிட்டு ஒரு சமூகம் செயல்படுமானால் அது மோசமான திசையை நோக்கித்தான் செல்ல முடியும். அதன்பொருட்டு, ஒரு சமூகம் தனது வரலாற்றைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மண்டேலாவைத் தனது தேசத்தின் தந்தையாகப் பார்க்கிறது தென்னாப்பிரிக்கா. ஒவ்வொரு ஆண்டும் அவரைப் பல்வேறு விதங்களில் நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்கிறது. அவர் நிறவெறியர்களுக்கு எதிராக மட்டும் போராடியவர் அல்ல. ஆதிக்க மனோநிலைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர். ஆதிக்கம் செலுத்தும் கறுப்பினத்தவர்களையும் நான் ஏற்க மாட்டேன் என்றவர். ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகப் போராடியதுடன், அன்பையும் கருணையையும் மன்னிப்பையும் தனது தாரக மந்திரமாகக் கொண்டிருந்தவர். அதனாலேயே அவர் உலகளாவிய தலைவர் ஆகிறார்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x