

2015இல் செயல்பாட்டுக்கு வந்த பாரிஸ் காலநிலை ஒப்பந்தப்படி உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இப்போதே 1.2 டிகிரி செல்சியஸ் உயர்வைத் தொட்டுவிட்டோம். ஒருவேளை, காலநிலை மாற்றத்தை நாம் கட்டுப்படுத்தினால்கூட கடல்மட்டம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது என்கிறது டர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ் ஸ்டோக்சின் தலைமையிலான ஆய்வுக் குழுவினரின் ஆராய்ச்சிக் கட்டுரை. ‘நேச்சர்’ 2025 மே இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை இது.
கடல்மட்ட உயர்வைப் பற்றிய முந்தைய கணிப்புகளில் பனிப்பாறைகள் (Glaciers), பனித்தகடுகள் (Ice sheets) எந்த அளவுக்கு உருகும் என்பது துல்லியமாக அளக்கப்படவில்லை. இந்த ஆய்வுக் குழுவினர் கிரீன்லாந்திலும் அண்டார்க்டிகாவிலும் பனித்தகடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள்.