கன்னட அமைப்புகளுக்கு விழுந்த அடி..!

கன்னட அமைப்புகளுக்கு விழுந்த அடி..!
Updated on
2 min read

நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காதவரை, ‘தக் லைஃப்’ படத்தை திரையிட விட மாட்டோம் என்று மிரட்டல் விடுத்த கன்னட அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் குட்டு வைத்துள்ளது.

கன்னட அமைப்புகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டதுடன், முறைப்படி அனுமதி பெற்று வெளியிடப்படும் ஒரு படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு குழுவினர் சொல்கிறார்கள் என்றால், அங்கு தான் மாநில அரசு தனது சட்ட அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற கடமையையும் நீதிபதிகள் நினைவூட்டியுள்ளனர். மிரட்டல் விடுக்கும் அமைப்புகளுக்கு மாநில அரசு பயந்து நடப்பது கூடாது என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.

பல சமயங்களில் கன்னட அமைப்புகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருந்து கொண்டு மிரட்டல் விடுக்கும் செயல்கள் அரங்கேறி வரும் நிலையில், ‘தக் லைஃப்’ பட விவகாரத்தின் மூலம் அவர்களது எல்லை மீறிய செயல்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நிலைமையை உணர்ந்து கொண்டு மாநில அரசும் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. கன்னட திரைப்பட வர்த்தக சபையும் நெருக்கடிகளுக்கு ஆளாகி விட்டோம்; திரைப்படத்தை வெளியிடுவதில் ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு மனம் மாறியிருப்பது வரவேற்கத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்பு மூலம் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், அவரது திரைப்படமும் கர்நாடகாவில் திரையிட வழிவகை ஏற்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு மற்றொரு உதாரணம்.

காவிரி பிரச்சினையாகட்டும், கன்னட மொழிப் பிரச்சினையாட்டும் கன்னட அமைப்புகள் தங்களை சட்டத்தை மீறிய அதிகாரம் படைத்தவர்களாக கருதிக் கொண்டு நேரடியாக தனி நபர்களுக்கு மிரட்டல் விடுப்பது, தலைக்கு விலை வைப்பது, தீ வைத்தல், திரையரங்குகளை அடித்து நொறுக்குதல், திரையிடுவதற்கு தடை விதித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது எந்த வகையிலும் அனுமதிக்க முடியாதது. இத்தகைய அத்துமீறிய செயல்களுக்கு ஆளும் அரசுகளும் கண்டும் காணாமல் இணங்கிச் செல்வது, ஆட்சி அதிகாரம் மிரட்டல் அமைப்புகளின் கரங்களுக்குச் செல்ல வழிவகுத்து விடும்.

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் என்றால், அப்படி இல்லை என்று மறுப்பதற்கும், அதற்கான ஆதாரங்களைக் காட்டும்படி கேட்பதற்கும் கன்னட அமைப்புகளுக்கு உரிமை உண்டு. அல்லது தமிழுக்கு முந்தைய மொழி கன்னடம் என்பதற்கான வரலாற்று ஆவணச் சான்றுகள் இருந்தால் எடுத்துக் காட்டுவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.

மொழி அரசியல் என்பது இருபுறமும் கூரான ஒரு கத்தி என்பதையும், தர்மமற்ற முறையில் அதை யார் உற்சாகப்படுத்தினாலும் அது அவர்களையே திருப்பித் தாக்கும் என்பதையும் கர்நாடகம் மட்டுமல்ல, மொழி சார்ந்த தீவிர பிரிவினைவாதம் பேசும் அனைவருமே உணர வேண்டிய நேரமிது. மொழியும் வேண்டும்; மாநிலத்தின் வளர்ச்சியும் வேண்டும் என்பதே இந்தக் காலத்திற்கேற்ற சிந்தினையாக இருக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in