Last Updated : 29 Jul, 2018 09:50 AM

 

Published : 29 Jul 2018 09:50 AM
Last Updated : 29 Jul 2018 09:50 AM

கடலுக்குப் போகுது காவிரி  காபந்து பண்ண திட்டமில்லை! - தண்ணீர் வந்தும் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

இத்தனை நாளும் காவிரி தண்ணீருக்காகத் தவமாய் தவம் கிடந்த தமிழக விவசாயிகள், தற்போது காவிரியில் கரைபுளும் தண்ணீர் இப்படி வீணாகக் கடல் நோக்கிப் பாயப்போகிறதே என்று கண்ணீர் வடிக்கிறார்கள்! ஜூலையின் தொடக்கத்தில் வறண்டு கிடந்த காவிரி தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இரு கரையும் தொட்டு ஓடுகிறது காவிரி. தேவைக்கேற்ப தண்ணீரைத் தேக்கி வைக்க முன்னேற்பாடுகள் இல்லாததால், இனிவரும் தண்ணீரெல்லாம் கடலுக்கே போகும் என்பது மிகப் பெரிய வேதனை.

படுகையில் மொத்தம் 26,241 கி.மீ நீளத்துக்கு வாய்க்கால்கள் பரவிக் கிடக்கின்றன. இதில் பெரும்பாலானவை தூர்வாரப்படவில்லை. மயிலாடுதுறை துலாகட்டம் பகுதிக்கு வியாழக்கிழமை மாலை வரை தண்ணீர் வந்து சேரவில்லை. ஆற்றின் மேல்புறம் உள்ள பகுதிகளில் நடைபெற்றுவரும் மராமத்துப் பணிகளே இதற்குக் காரணம். திருச்சி உய்ய கொண்டான் வாய்க்காலில் புதன்கிழமையன்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் போகவில்லை.

இந்தப் பணிகளெல்லாம் முறையாக நடந்து முடிந்தாலுமே உபரித் தண்ணீரைச் சேமித்து வைக்கப் போதிய திட்டமிடல் நம்மிடம் இல்லை. தண்ணீரைச் சேமித்து வைக்க சில ஆண்டுகளுக்கு முன்பே யோசனை ஒன்றை அரசுக்குத் தெரிவித்தார் காவிரிப் பாசன பகுதிகளில் மேற்பார்வைப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற என்.நடராஜன். இப்போது நம்மால் மேட்டூரில் மட்டுமே காவிரித் தண்ணீரைத் தேக்கி வைக்க முடிகிறது. மேட்டூருக்குக் கீழே காவிரியிலும், கொள்ளிடத்திலும் தேவையான கதவணைகளைக் கட்டி அவற்றில் தேவைக்கேற்ப மேட்டூர் தண்ணீரை இறக்கிக் கொண்டுவந்து தேக்கி வைக்கலாம். இதன் மூலம் மேட்டூர் அணையில் இன்னும் கூடுதலான நீரைத் தேக்க முடியும் என்பதே நடராஜனின் யோசனை.

“கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்க, சுத்தமல்லி ஏரியும், பொன்னேரியும் வறண்டு கிடக்கின்றன. கதவணைகள் கட்டப்பட்டு பொன்னாற்றில் புதிய கால்வாய் தோண்டப்பட்டு அதன் வழியாகக் கொள்ளிடத்து தண்ணீரைத் திருப்பினால் இரண்டு ஏரிகளும் நிரம்பி பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி பாசனத் தேவையைப் பார்த்துக்கொள்ளும். கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் செய்திருப்பதைப் போல உபரித் தண்ணீரை மடைமாற்றி சேமித்து பாசனப்பகுதியை விரிவுபடுத்தும் மற்றும் புதிய பாசனக் கால்வாய்களை ஏற்படுத்தும் பணிகளை முதல்வர்  பழனிசாமியின் அரசாங்கம் இப்போதாவது முன்னெடுக்க வேண்டும்” என்கிறார் காவிரிப் படுகை பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வீர.இளங்கீரன்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மேட்டூரில் காவிரி இறுதித் தீர்ப்பு அடையாளத் தூணை திறந்து வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, “ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் தடுக்க மூன்றாண்டுகளுக்குள் காவிரியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கதவணைகள் கட்டப்படும்” என்றார். ஆனால், கடந்த 19-ம் தேதி அதே மேட்டூரில் தண்ணீரைத் திறந்துவிட்டுப் பேசிய அவர், “காவிரி சமவெளிப்பகுதி என்பதால் அதில் தடுப்பணைகள் கட்டுவது சாத்தியமில்லை” என்று ஏட்டைத் திருப்பிவிட்டார்.  காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபாலன் இன்னொரு திட்டத்தையும் சொல்கிறார். “திருச்சிக்கு மேற்கே 90 பெரிய ஏரிகள் இருக்கின்றன. அதில், 75 ஏரிகளில் உடனடியாகத் தண்ணீரைக் கொண்டுபோய் சேமிக்க வாய்ப்பிருந்தும் அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யவில்லை. இதேபோல, காவிரிப் பிரதேச மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளில் நீரைத் தேக்கி அங்கும் பாசனப் பரப்பை அதிகரிக்கலாம். தவிரவும், ஆறானது கடலில் போய் கலக்க வேண்டும் என்பது இயற்கையின் சுழற்சி. ஆண்டுதோறும் ஆந்திரா 3,300 டி.எம்.சி தண்ணீரை கடலுக்கு அனுப்புகிறது. தமிழகத்திலிருந்து 200 முதல் 500 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கடலில் கலக்கிறது. எனவே, ஆற்று நீர் கடலில் கலப்பதைத் தடைசெய்யக் கூடாது” என்கிறார் தனபாலன்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மேட்டூருக்கு மேலேயே இன்னொரு அணையைக் கட்டி தண்ணீரைத் தேக்க முடியும் என்கிறார். “ஒகேனக்கல் அருகே மேகேதாதுவுக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள ராசிமணலில் நாம் ஒரு அணையைக் கட்டினால் தமிழகத்தின் நீர்த்தேவையைக் கணிசமாகப் பூர்த்திசெய்யலாம். தமிழகத்தின் பெரும்பாலான அணைகளுக்கு அடித்தளமிட்ட காமராஜரின் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் இது. இதை நாம் செய்துவிடுவோம் என்ற ஐயத்தில்தான் மேகேதாதுவில் அணை கட்டத் துடிக்கிறது கர்நாடகா. இதற்கான வழிவகைகளை ஆராய்ந்து ராசிமணலில் அணை கட்டும் பணியைத் தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும்” என்கிறார் பி.ஆர்.பாண்டியன்.

இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம். “காவிரியில் இப்போது வரும் தண்ணீரை நீர்நிலைகளுக்குக் கொண்டுசென்று சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், கடைமடை வரையிலும் தண்ணீர் தடையின்றி செல்வதைக் கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளார் முதல்வர். கொள்ளிடத்தில் வரும் தண்ணீர் அணைக் கரையிலும், வீராணத்திலும் சேமித்தது போக மீதிதான் கடலுக்குப் போகும். காவிரியில் திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் தடுப்பணையும் மாயனூரில் கதவணையும் கட்டப்பட்டுள்ளது. கடலூர் - நாகை மாவட்டங்களைப் பிரிக்கும் இடத்தில் குமாரமங்கலம் - ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட அடுத்த பட்ஜெட்டில் திட்டம் அறிவிக்கப்படும். ராசிமணலில் அணை கட்டுவது குறித்து முதல்வர், அரசுப் பொறியாளர்களைக் கலந்தாலோசித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்” என்றார்.

‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்று சொல்லும் நம் தமிழினம் இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்க வழியில்லாமல் இன்னும் எத்தனை தலைமுறைக்குத்தான் இப்படித் திண்டாடப்போகிறதோ!

-கரு.முத்து, தொடர்புக்கு: muthu.k@kamadenu.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x