

‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அரசியல் பொருளாதார நலன்களுக்காக இந்தியாவில் நிறுவப்பட்ட நவீனப் போக்குவரத்துக் கருவிகள், தனிமைப்பட்டு அசைவற்று இருக்கும் கிராமங்களை இணைத்து, இயந்திரத் தொழிலைப் பெருக்கி, முன்னேற்றத்துக்கும் அறிவு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையான குலத்தொழில் பிரிவினைகளையும் ஒழித்துப் புத்துயிர் அளிக்கும்’ என 1853இல் கார்ல் மார்க்ஸ் கணித்தவை பிற்காலத்தில் நடந்தேறின. அவை, இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சியிலும், அசமத்துவச் சமூகத்தைச் சமத்துவமாக உருமாற்றுவதிலும் நேர்மறையாகப் பங்காற்றுகின்றன.
விபத்து விவரங்கள்: நில, நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் எதிர்மறையாக விபத்துகளையும் விளைவிக்கின்றன. இவை பற்றிய புள்ளிவிவரங்கள் 1920கள் வரையிலும் பதிவுசெய்யப்படவில்லை. எனினும், விபத்து வழக்குகள் கோடிட்டுக் காட்டப்பட்டன. 1931 டிசம்பர் 10 அன்று தண்டவாளத்தைக் கடந்தபோது, சைதாப்பேட்டை ஆர்.டி.ஓ. மீது ரயில் ஏறியதால் அவர் இறந்தது உள்பட ஓரிரு செய்திகள் கிடைக்கின்றன.