மாமரங்களை வெட்டி அழிக்கும் விவசாயிகள்..!

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இந்த ஆண்டு மாங்காய் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் ஆசையாய் வளர்த்த மாமரங்களை விவசாயிகள் வெட்டி அழிப்பதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மாம்பழங்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக உற்பத்தி இருப்பதால் நியாயமான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வருத்தப்பட்டு மாமரங்களை அழிக்கும் உச்சகட்ட முடிவுக்கு சென்றுள்ளனர்.

ஆந்திர மாநில விவசாயிகளும் இதே பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மாம்பழங்களை சாலைகளில் கொட்டி அழித்து வருகின்றனர். ஆந்திர அரசு இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.8 என்று விலை நிர்ணயித்து, ரூ.4 மானியமாக வழங்கி விவசாயிகளுக்கு ரூ.12 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் விவசாயிகளின் குரலுக்கு செவி கொடுக்க யாரும் இல்லை.

உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மாம்பழங்களில் 45 சதவீதம் அதாவது 2.24 கோடி டன் மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாம்பழ உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, பீகார், குஜராத், மேற்குவங்கம், தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதற்கடுத்தபடியாக மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாம்பழ உற்பத்தி செய்யும் விவசாயிகள் பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல், விளைச்சல் பாதிப்பு என ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இவை அனைத்தும் சாதகமாக அமைந்துவிட்டால், விளைச்சல் அதிகமாகி நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க அரசின் உதவியையே விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மா உற்பத்தி துவங்கும்போதே, ஆண்டிற்கான தேவை, சந்தை நிலவரம், உற்பத்தி அளவு இவற்றை கணக்கிட்டு திறம்பட நிர்வகிக்க சிறப்பான வழிகாட்டுதல் குழுவை உருவாக்க வேண்டும். அதிக விளைச்சல் காலங்களில் இருப்பு வைப்பதற்கான குடோன்கள், மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற பயிற்சி, சந்தைப்படுத்துவதற்கு தேவையான உதவிகள், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை அதிகரித்து, ஏற்றுமதி செய்வது குறித்த பயற்சிகளை விவசாயிகளுக்கு வழங்குதல் என பல்வேறு வகைகளில் அரசு உதவி செய்யவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களுக்குள் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு உற்பத்தி செய்யும் அளவு, விற்பனை விலை உள்ளிட்டவற்றை கூட்டாக முடிவு செய்கின்றன. முட்டை உற்பத்தியாளர்கள் அதேபோன்று கூட்டணி ஏற்படுத்தி, உற்பத்தி அளவு, சந்தை விலையை முடிவு செய்து நஷ்டம் ஏற்படாமல் நியாயமான விலை கிடைக்கும் வகையில் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

அதேபோன்று, விவசாயிகளும் விவசாயப் பொருட்களின் உற்பத்தி துவங்கும் நிலையிலிருந்து, சந்தைக்குச் சென்று உரிய விலை கிடைக்கும் வரை முறைப்படி நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை அரசும் செய்தால் மட்டுமே விவசாயிகளைக் காக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in