

உலகின் பல பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, பெரும் மக்கள் கூட்டத்துக்குக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, இந்தியாவில் இந்த உரிமை மறுப்பு ஒரு சமூக மரபாகவே தொடர்ந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம், ஆசிய - ஆப்ரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்கள், சீர்திருத்தங்களுக்கான கிளர்ச்சிகள் என்று பல்வேறு வடிவங்களில் தோன்றிய முற்போக்கு இயக்கங்கள் காரணமாகக் கல்வி கற்கும் உரிமை உள்ளிட்ட சில உரிமைகள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்தன.
அரசியல் விடுதலையடைந்த இந்தியாவில், குடிமக்களின் கல்வியறிவு மேம்பட, இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைப்படி, மத்திய / மாநில அரசாங்கங்கள் பல கொள்கை முடிவுகளை, திட்டங்களை மேற்கொண்டன. அதன் விளைவாகக் கடந்த காலங்களில், கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேசத்தின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும்படியான சில நிகழ்வுப்போக்குகளும் ஏற்பட்டிருக்கின்றன. நுழைவுத் தேர்வுகள், கூடுதலான பொதுத் தேர்வுகள் என்னும் பெயரில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் புறந்தள்ளத்தக்கவை அல்ல.