

ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஆகியவை மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துவருகின்றன. தமிழ்நாட்டின் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் வளர்ந்த நாடுகளுக்கு இணையானது என்று பெருமை பேசுகிறோம். இதில் மேலே குறிப்பிட்ட சமூகப் பிரிவு மக்களின் குழந்தைகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில், விடுதி வசதிகள் (ஆண் / பெண் இருபாலருக்கும்) தேவைப்படுகின்றன. செயல்படும் விடுதிகளின் தரம் குறித்த விமர்சனங்களும் தொடர்கின்றன.
கட்டுரையும் எதிர்வினையும்: இந்த விடுதிகளின் நிலை குறித்துக் குடிமைச் சமூகத்துக்கு அதிகம் தெரிவதில்லை. அவ்வப்போது மாணவர் அமைப்புகளோ, விடுதி மாணவர்களோ நடத்தும் போராட்டங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வரும்போது பலர் அதைக் கவனிப்பார்கள். 2022 பிப்ரவரி 5 ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘ஆதிதிராவிடர் நல விடுதிகள்: அவலம் தீர்க்குமா அரசு?’ என்கிற தலைப்பில், ஒரு கட்டுரை இதே கட்டுரையாளரால் எழுதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2022 மார்ச் 18 அன்று, தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில், விடுதி மாணவர்களின் நலம் பேண ஓர் உயர்மட்டக் குழுவை அறிவித்தது. இதைத் தொடர்ந்து துரிதமாகப் பணிகள் நடைபெற்றன. ‘