

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுக்க விமானபயணம் குறித்த பாதுகாப்பு அம்சங்களை கேள்விக்குரியதாக மாற்றியுள்ளது. அதுவும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன், பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்ட விமானங்களில் ஒன்றாக கருதப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் 787 விமானம் நடுவானில் இரண்டு இன்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி கீழே விழுந்து நொறுங்கியது விமானபோக்குவரத்து துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினரையும் செய்வதறியாத நிலைக்கு தள்ளியுள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னையை நோக்கி கிளம்பிய விமானம் ஒன்று நடுவானில் இன்ஜின் பழுது காரணமாக மீண்டும் திரும்பிச்சென்று தரையிறங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்துஉத்தரப்பிரதேசம் வந்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது சக்கரத்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பின்றி தப்பியுள்ளனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் விமான பயணத்திற்கான பாதுகாப்பு அம்சங்களை இன்னும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகிறது.
கார்களில் விபத்து நேர்ந்தால் ‘ஏர் பேக்’ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால், அவை விரிந்து பயணம் செய்வோரை காப்பாற்றிவிடும். போர் விமானங்களில் விபத்துஏற்படும்போது, விமானத்தை இயக்கும் பைலட் தன் இருக்கையை விமானத்திலிருந்து விடுபடச் செய்துபாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பயணிகள் விமானத்தில் அனைத்து தொழில்நுட்பங்களும் தோல்வியடைந்து விபத்து நடப்பது உறுதியாக தெரியும் நிலையில், மொத்த விமானத்திற்கும் பாராசூட் போன்ற வசதியை செய்ய முடியுமா? என்று ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது.
விமானம் பயணிக்கும் உயரம், வேகம் அவற்றை வைத்துப்பார்க்கும்போது அதற்கான சாத்தியமில்லை என்று நிபுணர்கள் நிராகரித்து விட்டனர். பயணிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாராசூட் வழங்கி பாதுகாக்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்ததில், பாராசூட் மூலம் வானில் இருந்து குதிப்பதற்கு நீண்ட பயிற்சி தேவை. அத்தகைய பயிற்சி பெறாத பயணிகளுக்கு அவசர காலத்தில் அந்த வசதியைச் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விவாதத்தை வல்லுநர்கள் மீண்டும் தொடரவேண்டும். ஆபத்து நேரும்போது பைலட், பணிப்பெண்கள், பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருந்து வெளியேற்றி காப்பாற்றுவது எப்படி, அதற்கேற்ப விமான வடிவமைப்பில் என்ன மாற்றங்களைச் செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.
பைலட் அமர்ந்திருக்கும் காக்பிட் மற்றும் பயணிகளின் இருக்கைப் பகுதியை மட்டும் தனியாக குழாய் போன்ற அமைப்பில் வடிவமைத்து, ஆபத்து காலங்களில் அந்தப் பகுதி மட்டும் பின்புறமாக வெளியேறி பாராசூட் மூலம் தரையிறங்கும் வகையில் விமான அமைப்பை மாற்றலாமா என்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இத்துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் கூடி ஆலோசித்தால் நிச்சயம் தீர்வு கிடைக்காமல் போகாது.