ஈர நிலத்தை வேலி போட்டு பாதுகாப்பது அவசியம்!

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி | கோப்புப் படம்
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அங்கு இரண்டு குள்ளநரிகள் வசிப்பதை கண்டறிந்துள்ளனர். வாகன இரைச்சல் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கான்கிரீட் காடாக திகழும் சென்னை நகரில் பசுமைப் பகுதி ஒன்று மிஞ்சியிருப்பதும் அதில் உயிரினங்கள் பல வசிப்பதும் ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் தேசிய ஈரநில பாதுகாப்பு மற்றும் நிர்வாக திட்டம்(NWCMP) மூலம் நாடு முழுவதும் கண்டறியப்பட்ட 94 ஈர நிலங்களில் சென்னை பள்ளிக்கரணையும் ஒன்று. தமிழகத்தில் உள்ள மூன்று ஈர நிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ராம்சார் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஈர நிலம் பல வகைகளில் மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் பயன்படுகிறது. இங்கு பல ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வருகின்றன. பிரபலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைக் காட்டிலும் அதிக பறவைகள் இங்கு வசிப்பதும், வந்து செல்வதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதுதவிர, அரிய புல்வகைகள், மீன் இனங்கள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பள்ளிக்கரணை ஈர நிலத்தில் வசிக்கின்றன. ஆண்டு முழுவதும் ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை படைத்த பள்ளிக்கரணை சதுப்பு பகுதி, சென்னை நகர் வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது, அதிகப்படியான நீரை உள்வாங்கி மக்களை வெள்ள ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் இருந்து வருகிறது.

இத்தகைய ஈரநிலம் சென்னையின் ஒரு அங்கமாக இயற்கையாக அமைந்திருப்பதே பெருமைக்குரியதாகும். ஆனால், அந்த சதுப்பு நிலப் பகுதியை முறையாக பாதுகாக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். ஆக்கிரமிப்புகள், கழிவுநீரை கலப்பது, அபாயகரமான ரசாயனங்களை கலந்துவிடுதல், குப்பைக்கிடங்கு உருவாக்கி மலைபோல் குப்பைகளை கொட்டி வைத்தல், சதுப்பு நிலத்தின் குறுக்கே சாலை அமைத்தல், கட்டிடங்களைக் கட்டுதல் என ஈர நிலத்தை அழிக்கும் வேலைகள் பல நடந்தேறி விட்டன.

முந்தைய ஆட்சி காலத்தில் பள்ளிக்கரணை நிலத்தை காப்புக் காடாக அறிவித்தது மட்டுமே நல்ல விஷயம். குப்பைக்கிடங்கை அகற்றவும், குப்பையை உரமாக்கும் நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவுகளால் நடந்து வருகின்றன. இருந்தாலும் சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வகுக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

சென்னை நகரின் பசுமைப் பகுதியாகவும், வெள்ள காலங்களில் நம்மைப் பாதுகாக்கும் அரணாகவும் திகழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பதும், அங்கு வசிக்கும் பறவைகள், உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்காமல் காப்பதும் இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் கடமையாகும். சதுப்பு நிலத்தை கபளீகரம் செய்துள்ள நிலவணிக மாஃபியாக்களிடம் இருந்து ஈர நிலத்தை மீட்பதுடன், அந்தப் பகுதியை பாதுகாக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படாத அனைத்து திட்டங்களையும் தாமதமின்றி உடனே செயல்படுத்த முன்வர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in