

புதிய கல்வி ஆண்டு தொடங்கியதுமே சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரின் பதற்றங்களும் தொடங்கிவிட்டன. ஒரு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மனநிலைக்குப் பிள்ளைகளைத் தயார்செய்தாக வேண்டும். புதுப் பள்ளியில் சேர்க்க வேண்டியிருந்தால், பள்ளியில் இடம் கிடைக்குமா, என்னென்ன எதிர்ப்புகள் வரும் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
ஆசிரியர்களின் புறக்கணிப்பு: பொதுவாக, சற்று வசதியானவர்கள், தங்கள் சிறப்புக் குழந்தைகளின் கல்விக்காகத் தொடக்கத்தில் தனியார் பள்ளிகளின் கதவுகளைத் தட்டுவார்கள். சில மாத பண இழப்புக்கும் அலைக்கழிப்புக்கும் பின்னர், அங்கிருந்து அம்மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள். பிறகு ஏதேனும் சிறப்புப் பள்ளிகளைப் பெற்றோர்கள் கண்டடைந்து, பிள்ளைகளைச் சேர்த்துவிடுவார்கள்.