

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாணவர் விடுதிகளின் அவல நிலையை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுங்கட்சியின் கவனத்திற்கு வராத மக்கள் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் தலையாய பணி என்ற முறையில், மாணவர் விடுதிகள் குறித்த பிரச்சினையை மத்தியில் ஆளும் பாஜக அரசின் கவனத்திற்கு அவர் ஆக்கப்பூர்வமாக கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரியது. பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பட்டியலின மாணவர்கள் தங்கிப் படிக்கும் அம்பேத்கார் மாணவர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள குறைகளை ராகுல்காந்தி பட்டியலிட்டுள்ளார்.
ஒரே அறையில் 6,7 மாணவர்கள் வரை நெருக்கடியில் தங்கியிருப்பது, சுகாதாரமற்ற கழிப்பிடம், தரமற்ற உணவகம், குடிநீர் வசதியில்லாத நிலை, முறையான படிப்பகங்கள் மற்றும் இணைய வசதி இல்லாத நிலை போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் சிரமப்படுவதையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தாமதமாக வழங்கப்படுவது, மிக குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டிருப்பது போன்ற குறைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டில் 1.36 லட்ச மாக இருந்த உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, 2024-ல் 69 ஆயிரமாக குறைந்துவிட்ட விவரத்தையும் தெரிவித்துள்ளார். உதவித் தொகையை விண்ணப் பிக்கும் இணைய தளம் 3 ஆண்டுகளாக வேலை செய்யாமல் கிடக்கும் அவல நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசால் வழங்கப்படும் இந்த வசதிகளை நம்பி பட்டியலினத்தவர், பழங்குடியினர், பொருளாதார நலிவடைந்த பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களே உள்ளனர். மாணவர் விடுதிகளில் உள்ள அவல நிலையால் அவர்களின் கல்வி வளர்ச்சி வெகுவாக பாதிக்கிறது. ராகுல்காந்தி தெரிவித்திருப்பதைப் போல், இந்த அவல நிலை பீகாரில் ஒரே ஒரு விடுதியில் காணப்படும் நிலையல்ல.
தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும் அதே நிலை தான் நீடிக்கிறது. இந்த விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற ராகுல்காந்தியின் கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையாக மட்டும் கருதாமல், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் கோரிக்கையாக கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, முதற்கட்டமாக இத்தகைய மாணவர் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். அதன்பிறகு, போதுமான அடிப்படை வசதிகளுடன் விடுதிகளின் தரத்தை உயர்த்த தேசிய அளவில் திட்டம் வகுக்கப்பட்டு, உரிய நிதியையும் ஒதுக்கி, நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் தரமான வசதிகளுடன் செம்மையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்மூலம், ஏழை, எளிய பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் எந்த இடையூறுமின்றி தங்களது படிப்பில் கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நிலையை உருவாக்க முடியும்.