

குழந்தைகளை நேசிக்காதவர்கள் எவரும் இல்லை, தம் மக்களின் மழலைச்சொல்லை ரசிக்காத குடும்ப அமைப்புகள் கிடையாது. பாப்பா பாட்டை ஒலிக்கவிடாத பள்ளிக்கூடம் கிடையாது. ஆனால், எந்த அளவுக்குக் கொண்டாடப்பட்டாலும் குழந்தைகளுக்கு - அவர்கள் வாழ்வதற்கு உகந்த, குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அலட்சியப்படுத்தப்பட்ட பெருந்தொற்று என்றே சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் இது அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை - உடல்ரீதியானது, பாலியல் ரீதியானது, உளவியல்ரீதியானது, தொழில்நுட்பரீதியானது, ஒதுக்குதல் என - ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். உடல்ரீதியான வன்முறையில் அடித்தல், துன்புறுத்தல், கட்டாய உழைப்பு உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் பிற வன்முறைகளுக்கு எதிராக வலுவான சட்டங்கள் இருந்தாலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட குழந்தைத் தொழில் உழைப்பு முறை இன்னும் இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை.