

புனேயில் இருந்து 178 பயணிகளுடன் கிளம்பி சென்னையில் தரையிறங்க முயன்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது சில விஷமிகள் லேசர் ஒளியை பாய்ச்சி விமானிகளை திணறடித்துள்ளனர். விமானம் வானத்தில் வட்டமடித்து சமாளித்து பின்னர் தாமதமாக தரையிறங்கியுள்ளது. கடந்த ஜூன் 6-ம் தேதியும் ஐக்கிய அரபு எமிரேட்சின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் துபாயில் இருந்து கிளம்பி சென்னை வந்திறங்கியபோது லேசர் ஒளி பாய்ச்சி விமானிகளை திக்குமுக்காட வைத்துள்ளனர். கடந்த மே 25-ம் தேதியும் இதே விமானத்தின்மீது லேசர் ஒளி பாய்ச்சியுள்ளனர்.
கடந்த 15 நாட்களில் 3 முறை இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது சென்னையில் விமானம் தரையிறங்குவதற்கான பாதுகாப்பு அம்சத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. விமானத்தின் இயக்கத்தில் தரையில் இருந்து கிளம்புவதும், மீண்டும் தரையிறங்குவதும் முக்கியமான நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. அப்படி மிக கவனத்துடனும், பாதுகாப்புடனும் தரையிறங்கும்போது இதுபோன்ற லேசர் ஒளியை விமானிகள் கண்கூசும்படி பாய்ச்சும்போது அது விமானியை நிலைகுலையச் செய்து பயணிகள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தொடர்ச்சியாக இதேபோன்ற சம்பவம் நடக்கிறதென்றால், குற்றம் செய்பவர்களுக்கு காவல்துறை மீதும், சட்டப்படி வழங்கப்படும் தண்டனை மீதும் அச்சம் குறைந்துவிட்டது என்றே பொருள்.
விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பரங்கிமலை, பல்லாவரம், கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பார்கள். முதல்முறையாக இச்சம்பவம் நடக்கும்போதே காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்திருந்தால், மீண்டும் மீண்டும் இச்செயல் நடந்திருக்காது. விமானத்தின்மீது லேசர் ஒளி பாய்ச்சுவதை விளையாட்டுக்காக செய்யப்படும் சாதாரண செயல் என்று காவல்துறை அலட்சியம் காட்டக் கூடாது.
விமானத்தில் வரும் பயணிகளின் பாதுகாப்பு, விமானம் விபத்தில் சிக்கினால் விமான நிலைய பாதுகாப்பு மட்டுமின்றி, சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் விமானங்கள் மீது லேசர் ஒளி பாய்ச்சக்கூடாது என்ற எச்சரிக்கையை காவல்துறை வெளியிட வேண்டும்.
ஏற்கெனவே இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தாமாக முன்வந்து காவல்துறையில் சரணடையும்படி அறிவிப்பு வெளியிடுவதுடன், தவறினால் அவர்களை தேடிப்பிடித்து கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க முடியும்.
விமானம் தரையிறங்குதல் மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்பில் நாம் அலட்சியம் காட்டுவது சர்வதேச அளவில் நமது நாட்டை குறைத்து மதிப்பிடவும் வழிவகுத்துவிடும் என்பதையும் மனதில் கொண்டு காவல்துறை கூடுதல் முக்கியத்துவம் அளித்து குற்றம் செய்தவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.