

மலையேறுதல் என்பது ஒரு சாகசம். ஆன்மிகப் பயணிகளுக்கும் உற்சாகம் அளிக்கும் விஷயம். அதேவேளையில், மலையேற்றத்தின் மூலம் கிடைக்கும் களிப்பை மட்டும் பார்ப்பவர்கள், அதில் உள்ள ஆபத்துகளைக் கவனிப்பதில்லை. இந்த ஆண்டில் மட்டும், கோவை மாவட்டத்தின் வெள்ளியங்கிரி மலையில் ஏறியவர்களில், 15 வயதுச் சிறுவன் உள்பட ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாடு, மலை ஏறுகிறவர்களின் சுயக் கட்டுப்பாடு ஆகியவை இருந்திருந்தால், இந்த உயிரிழப்புகள் நேர்ந்திருக்காது.
நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழ்ந்தபோது, வருடத்துக்கு ஒருமுறை வெவ்வேறு மலை உச்சிகளுக்கு ஏறிச் சென்றிருக்கிறேன். மூன்று பகல் இரண்டு இரவு நடந்து, கடல் மட்டத்திலிருந்து 2,954 மீட்டர் உயரம் உள்ள, அந்நாட்டின் உயரமான ஆபோ (Mount Apo) சிகரத்துக்கும் நடந்து சென்று திரும்பியிருக்கிறேன். ஒரு நாளா, ஒரு வாரமா என்பதல்ல, மலையேற விரும்புகிறவர்களுக்குப் பொதுவான விதிமுறை உலகெங்கும் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.