

கொல்கத்தாவிலுள்ள சரித்திரச் சிறப்புமிக்க அலிப்பூர் சிறைச்சாலையை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அந்தச் சிறைச்சாலையில்தான் நேதாஜி, நேரு, பி.சி. ராய், சி.ஆர். தாஸ் சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். அங்கேதான் பதினெட்டு வயதான குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியச் சாட்சியமாக விளங்கும் இந்தச் சிறைச்சாலை இன்றைய தலைமுறைக்குத் தேச விடுதலையின் உண்மைகளை அடையாளம் காட்டுகிறது. சுதந்திரப் போராட்டக் கால வரலாற்றை உறைந்த கற்படிவமாக விட்டுவிடாமல் அதனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். நிகழ்காலத்தின் வேர்கள் கடந்த காலத்தினுள்தான் புதையுண்டிருக்கின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பாக யூதர்கள் தங்களுக்கு நடந்த துயரங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டி எல்லா இலக்கிய வடிவங்களிலும் அந்த அனுபவங்களை எழுதினார்கள்; நினைவூட்டினார்கள். நூற்றுக்கணக்கான நாவல்கள், திரைப்படங்கள், நாடகங்கள் வெளியாகியுள்ளன. யூத அருங்காட்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஹிட்லரின் கொடுமைக்குள்ளான யூத இனம் தனது வரலாற்றை உயிர்ப்புடன்வைத்துக் கொண்டது.