

சமீபத்தில் கொடுங்கையூர் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்குகளில், மட்கிப்போன குப்பைகளை உயிரிச் சுரங்கம் (Biomining) முறையில் எடுத்து, அவற்றிலிருந்து மாற்றுச் சக்தி உற்பத்தி செய்யப் போவதாக வெளியான அரசு வெளியிட்ட அறிவிப்பு, அப்பகுதி மக்களைக் கொதித்தெழச் செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்னால் அவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அதற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கொடுங்கையூர் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் கொடுமைகள் நமது கண்களில் ரத்தத்தை வரவழைக்கும். மருந்தடித்தும் மாளாது வீடுகளில் குவியும் ஈக்கள் பட்டாளம்; கொசுவத்திகள் ஏற்றி வைத்தாலும் ரத்தத்தை உறிஞ்சிச் செல்லும் ராட்சசக் கொசுக்கள்; குப்பைகளுக்குத் தீ மூட்டுவதால் எழும் புகை மண்டலங்கள் ஏற்படுத்தும் மூச்சடைப்பு, நெஞ்சுக்குழாய் நோய்கள்; காற்றடித்தால் பறந்துவரும் கரித்துகள்கள் வீடுகளில் படியும் அவலம் எனக் கொடுமைகளின் பட்டியல் நீளும். இறுதியாக, மாநகராட்சி செய்த ஒரே செயல் குப்பைக் கிடங்குகளை ஒட்டியுள்ள வீதியில் ஆறடிக்குத் தடுப்புச் சுற்றுச்சுவர் கட்டியது மட்டுமே. கிடங்குகளில் கொட்டப்பட்ட கழிவுகளைத் தரம் பிரிப்பதில் ஈடுபட்டது ஏழைச் சிறுவர்களும் பன்றிகளுமே.