

சாம்சங் தொழிலாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஊதிய உயர்வை மட்டும் ஒரு வெற்றியாக இங்கு குறிப்பிடவில்லை. தாங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்ட ஒரு தொழிற்சங்கத்தை மதிக்க மறுத்த நிர்வாகம், தங்களது சங்கத்தோடு ஓர் உடன்பாட்டை எட்டியிருப்பதுதான் சாம்சங் தொழிலாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி.
ஒரு பன்னாட்டு நிறுவனம், உள்நாட்டுச் சட்டங்களை மதித்தே தனது உற்பத்தியை இங்கே நடத்த வேண்டும் என்பதை அரசாங்கம் அல்ல, அந்த நிறுவனத்தின் எளிய உழைப்பாளிகள் உறுதிசெய்துள்ளனர் என்பது கவனத்துக்குரியது. தங்களை வருத்திக்கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை அறிந்தே களத்தில் இறங்கி, தங்களது எதிர்காலம் பற்றிய கேள்விகள் இருந்தாலும் நம்பிக்கையோடு அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களால்தான் இது சாத்தியமானது. அந்த வகையில் இந்த வெற்றி இன்னும் சிறப்பானது.