

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. ஜூன் மாதம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்த வங்கி அறிவித்திருப்பது சாதாரண மக்களுக்கு நிம்மதியை வரவழைத்துள்ளது.
தற்போது அந்த வங்கியில் நகர்ப்புறங்களில் உள்ள கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2000, இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.1000, கிராமப்புற கிளைகளில் உள்ள கணக்குகளுக்கு ரூ.500 பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. புதிய அறிவிப்பால் இந்த தொகை கணக்கில் எப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடியும் என்ற நடைமுறையால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளம். அத்தகைய மக்களுக்கு கனராவங்கியின் உத்தரவு பெரும் விடுதலையாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை என்ற உத்தரவை 2020-ம் ஆண்டேஅறிவித்துவிட்டது. அந்த வரிசையில் கனரா வங்கியும் மக்கள்நலன்சார்ந்த முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நேரடி நலத்திட்ட உதவிகளுக்காக துவக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், வேறு வங்கிக் கணக்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறும் சாதாரண மக்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு வரும் ரூ.1000, ரூ.2000 உதவித் தொகையில் இருந்து கூட வங்கிகள் அபராதத் தொகையை எடுத்துக் கொள்ளும் புகார்கள் வருகின்றன. எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் ஏழை மக்களை மனதில் கொண்டு இந்த சலுகையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதேசமயம், மற்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்கும் நடைமுறையை இன்னும் தொடர்கின்றன.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கிபல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும் அபராதம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் கையை விட்டு பணத்தை எடுக்கும் நடைமுறை குறைந்தபாடில்லை. எச்டிஎப்சி போன்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நகர்ப்புறங்களில் ரூ.10,000. இரண்டாம் கட்ட நகரங்களில் ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.2,500 என்ற நிர்ணயித்துள்ளன. வேறு சில கணக்குகளுக்கு இதைவிட அதிகம்.
இந்த இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத சாமானிய மக்களிடம் இருந்து அந்த வங்கிகள் கறாராக அபராதம் வசூலிக்கின்றன. இதுபோன்று அபராதமாக வசூலிக்கப்படும் தொகையே கோடிகளில் குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எஸ்பிஐ, கனரா வங்கியைப் பின்பற்றி மற்ற வங்கிகளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற வேண்டும்.