

உலகம் மாறிவிட்டது என்று சொல்வதற்குப் பின்னால் எவ்வளவு இழப்புகள், எவ்வளவு புதுமைகள், எவ்வளவு வேதனைகள், மகிழ்ச்சிகள், அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் இன்னொரு தலைமுறையைப் பார்த்து, ‘உலகம் மாறிவிட்டது’ என்கிறார்கள். சில நேரம் குற்றச்சாட்டாக, பல நேரம் குதூகலமாக, ஏமாற்றமாக, ஏக்கமாக, சந்தோஷமாகச் சொல்கிறார்கள். உலகம் மாறுவதைப் பற்றிய கவலையைவிடவும் உலகோடு சேர்ந்து நாமும் மாற வேண்டுமே என்பதில்தான் பலருக்கும் கவலை.
மாறும் உலகில் மாறாதது எது என்பதையும், மாற்ற வேண்டியது மாறியிருக்கிறதா என்பதையும், யாரால் எப்படி மாற்றம் ஏற்பட்டது, அது மனிதர்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் இலக்கியம் பேசுகிறது; ஆராய்கிறது. காலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாவல்கள் கொண்டிருக்கின்றன. ஒரு நாவலின் வழியாகவே அக்காலகட்ட மனிதர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையை எளிதாக அறிந்துகொண்டுவிட முடியும். சினிமா வருவதற்கு முன்பாகவே நாவல்கள் வாழ்க்கையை மிக நுட்பமாக, காட்சிபூர்வமாக ஆவணப்படுத்தியிருக்கின்றன.