

வங்கிகள் வழங்கும் நகைக் கடன்களுக்கான வரைவு கட்டுப்பாடுகள் ஜனவரி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஏழை எளிய மக்கள் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கும், திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு மருத்துவச் செலவுகளை சமாளிப்பதற்கும், இதர அவசர செலவுகளுக்கும் தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடகு வைத்து சமாளிக்கும் நடைமுறையே இந்தியாவில் பெரும்பாலும் இருந்து வருகிறது.
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆபத்துக்கு உதவும் நண்பனாக இருந்துவரும் நகைக்கடனை பெறுவதற்கு 9 நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துவரைவு விதிகளை வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதில் நகையின் தரத்தை சோதிப்பது, 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும் போன்றவிதிமுறைகள் நியாயமானதே. ஆனால், நகை வாங்கிய ரசீது இருக்க வேண்டும், 12 மாதங்களுக்குள் முழுமையாக திருப்பி மீண்டும் மறு அடமானம் வைக்க வேண்டும் என்பனபோன்ற விதிமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை.
அரசின் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது முதல் ஆளாக குரல் கொடுக்கும் மாநிலம் தமிழகம் என்பது இந்த விஷயத்திலும் நிரூபணமாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளை அமல்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டாமல் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக நகைக்கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. ரிசர்வ் வங்கியும் பொது மக்களின் கவலையை புரிந்து கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி வரை புதிய விதிமுறைகளை நிறுத்தி வைக்கவும், பொதுமக்களிடம் மேலும் கருத்து கேட்டு முடிவெடுக்கவும் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
வங்கிகள் மற்றும் வங்கிசாரா அமைப்புகள் வழங்கும் நகைக் கடன்களில் கடந்த ஆண்டு 11 லட்சம் கோடி வரை வராக்கடன்களாக மாறிவிட்டது. இது முந்தைய ஆண்டை விட 27 சதவீதம் அதிகம் என்பதாலேயே நகைக் கடன்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. ரிசர்வ் வங்கியின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அது நடைமுறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால், பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக தனியாரை நாடிச் சென்று அதிக வட்டியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும். அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், எதிர்ப்பு குரலில் அடங்கியுள்ள நியாயத்தை புரிந்து கொண்டு மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் உடனடியாக முடிவெடுத்திருப்பது மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் இனி எந்த புதிய நடைமுறைகளை கொண்டுவந்தாலும் எளிய மக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.