

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மூத்த குடிமக்கள், நிதிப் பாதுகாப்பின்மை, மற்றவர்களைச் சார்ந்திருத்தல், எழுத்தறிவின்மை, சமூகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், சுகாதாரச் சவால்கள், முதுமையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், தனிமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
இவற்றின் காரணமாக, முதியவர்களுக்கு மிகவும் வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள், வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் ஆகியவை தேவைப்படுகின்றன. நிம்மதியான, ஓய்வான எதிர்கால வாழ்க்கைக்காகச் சொத்து சேர்த்து வைக்கும் மக்கள், மூத்த குடிமக்களான பிறகு அப்படிப்பட்ட நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. இன்னொருபுறம், கால மாற்றங்கள், மருத்துவ முன்னேற்றங்களின் அடிப்படையில் முதியோர் என்பதற்கான வரையறைகள் இயல்பாக மாறிவருகின்றன. இந்தச் சூழலில், முதியோர் கொள்கையில் புதிய மாற்றங்கள் அவசியம்.