

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் அமெரிக்காவுக்கு முதன்மை இடம் என்ற கொள்கையை உருவாக்கி அனைத்து விஷயங்களிலும் அவர்கள் நாட்டுக்கு எது நன்மையோ அந்த முடிவுகளை அறிவித்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி, உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை, இறக்குமதி மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாடு என முடிவுகளை எடுத்து வருகிறார். சொந்த நாட்டின் நலன் கருதி அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளை குறைகூற முடியாது.
அந்த வரிசையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று படிக்கும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாணவர் விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய மாணவர்களின் விசாவை ரத்து செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், டார்ட்மவுத் கல்லூரி, ஹார்வர்டு பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பெனிசில்வேனியா மற்றும் யேல் பல்கலைக்கழகம் என 8 ‘ஐவி லீக் கல்வி மையங்கள்’ உலகப் புகழ்பெற்றவை. இங்கு கல்வி பயில்வதை அனைவரும் பெருமையாக கருதுகின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதுமிருந்து 20 லட்சம் மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கின்றனர். இந்தியாவிலிருந்து மட்டும் 3 லட்சம் மாணவர்கள் சேருகின்றனர்.
தற்போது கொண்டுவரப்படும் விசா கட்டுப்பாடுகளால் மாணவர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதேபோன்ற உயர் அந்தஸ்தில் வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை மாணவர்கள் தேடிச் சென்று சேர முடியும்.
மாணவர்களின் புதிய விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது அவர்களது முகநூல், எக்ஸ், லிங்க்டுஇன், டிக்டாக் ஆகிய சமூக வலைதள கணக்குகளில் அவர்களது பதிவுகளை சோதனை செய்து பயங்கரவாத ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு பதிவுகள் இருக்கிறதா என்பதை சரிபார்த்த பிறகே விசா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று சமூக வலைதள கணக்குகளுக்குள் மூக்கை நுழைப்பது தனிமனித அத்துமீறல் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு இத்தகைய சோதனைகள் தேவையாக உள்ளது. சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிடும் கருத்துகள் மூலம் அவர்கள் கொண்டுள்ள கொள்கை, குணாதிசயங்களை கண்டறிய முடியும்.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலரும் வெளியிடும் எல்லை மீறிய ஆபாச பதிவுகள், மிரட்டல், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள் குறித்து தெரிவிக்கும் ‘கமென்ட்’ ஆகியவற்றை கட்டுப்படுத்த இது ஒரு புது வழிமுறையாக மாறலாம். நாம் வெளியிடும் அத்துமீறிய பதிவுகள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் என்ற பயம் இருந்தால், அதுவே நாகரிகமான பதிவுகளுக்கு வழிவகுக்கும். அந்த வகையில் விசா, வேலைவாய்ப்பு, கல்லூரி சேர்க்கை போன்ற முக்கிய தருணங்களில் சமூக வலைதள கணக்குகளை சோதனை செய்வதில் தவறில்லை.