

நீண்ட காலமாக, இந்திய அரசின் பொதுநலக் கொள்கை உருவாக்கத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற துறைகளில் நுட்பமான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வகையில் இத்தரவுகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இந்நிலையில், அடுத்த தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது - சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்துக்கொள்வதாக - நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் துல்லியமான புள்ளிவிவரத் தரவுகளைச் சேகரிப்பது, பலருடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இருப்பினும் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தேவைக்கு அதிகமாக வலியுறுத்துவது, ஆளும் கட்சியின் அக்கறை, நோக்கம் ஆகியவை குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. துல்லியமான தரவுகள் இல்லாததால்தான் விளிம்புநிலை மக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்குவதில் - நியாயப்படுத்த முடியாத அளவுக்கு - காலதாமதம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.