

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி மாநிலத்தில் முதன்முறையாகப் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது கவனம் ஈர்த்தது. மாநிலத் திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’ தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்கள், பல்துறை ஆய்வாளர்கள், அரசியல் விமர்சகர்கள், இதழாளர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும் முக்கியமான சான்றாதாரம் இது.
பொருளியலின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரும் வாசிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எளிமையான அறிமுகம் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. உதாரணத்துக்கு, பணவீக்கம் குறித்த அத்தியாயம், பொருளியலில் அதன் முக்கியத்துவம் குறித்து எளிமையான அறிமுகத்தை வழங்கியுள்ளது. தொழில் துறை, சேவைத் துறைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவை ஒவ்வொன்றின் கீழும் இடம்பெற்றுள்ள துணைத் துறைகளைப் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றுள்ளன.