

பெண்களுக்கு உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களை அறிவியல்பூர்வமாக அணுகாமல், அவர்களின் உடல் மீது கட்டுக்கதைகளையும் தேவையற்ற அழுத்தங்களையும் சமூகம் திணித்துள்ளது. மாதந்தோறும் நிகழும் மாதவிடாயைப் புனிதம் என்றும் தீட்டு, அசுத்தம் என்றும் வகைப்படுத்தியதால், சமூகத்தில் கடைக்கோடிப் பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் எதிர்கொள்ளும் சவால்களையும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தைப் பொருளாதாரத்தையும் பற்றி விவாதிக்கத் தவறிவிட்டோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பரவலாக இருக்கும் அவலம் இது!
கட்டுக்கதைகள்: 19 ஆம் நூற்றாண்டில் உலகளவில் ‘நோய்க்கிருமிக் கோட்பாடு’ பேசுபொருளானது. இக்கோட்பாடு, மாதவிடாய் ரத்தத்தைத் தூய்மையற்றதாகவும், அருவருக்கத்தக்கதாகவும் வரையறுத்ததன் மூலம், தாங்கள் சுத்தமற்றவர்கள் என்னும் தாழ்வு மனப்பான்மையில் பெண்கள் சிக்க வைக்கப்பட்டனர். நோய்க்கிருமிக் கோட்பாட்டையும், பெண்களின் தாழ்வு மனப்பான்மையையும் பயன்படுத்திக்கொண்ட பெருநிறுவனங்கள், சில நறுமணமூட்டும் பொருள்களைத் திருமணமான பெண்கள் மத்தியில் திணித்தன.