

இன்றைய காலக்கட்டத்தில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு நடுவே நெல் சாகுபடியைத் தமிழ்நாட்டின் விவசாயிகள் துணிவோடு மேற்கொண்டு வருகிறார்கள். மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் என மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்துகொள்ளும் அறிவியல் தொழில்நுட்பம் தற்போது இருந்தாலும், இத்தகைய அறிவிப்புகளைக் கண்டு அச்சப்பட்டு சாகுபடியை விவசாயிகள் நிறுத்திவிடுவதில்லை.
தங்கள் வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி, மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு விவசாயத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் கொள்முதலைச் சீர்ப்படுத்துவதற்குப் பதிலாக, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளே மறைமுகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இது விவசாயிகளைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.