

ஜெயந்த் விஷ்ணு நாரலீகர் - இந்தியாவில் இருந்து சென்றிருந்த 26 வயது இளம் மாணவராக அன்று இருந்தார். எல்லா அறிவியலாளர்களும் தமக்குப் பேச அழைப்பு வருமா என ஆவலுடன் காத்திருக்கும் ராயல் சொசைட்டியில் பேசுவதற்காக அவர் லண்டன் சென்றிருந்தார். ஈர்ப்பு விசையின் புதிய கோட்பாடு என்பதுதான் தலைப்பு. டைராக், போண்டி, சலாம் என அந்தக் கால அறிவியல் மேதைகள் எல்லாம் பேச்சைக் கேட்கும் ஆவலுடன் கூடியிருந்தனர்.
புதிய வெளிச்சம்: தயங்காமல் எழுந்தார் நாரலீகர். தனது ஆய்வு ஆலோசகரும் புகழ்மிக்க வானியலாளருமான பிரெட் ஹோய்லுடன் இணைந்து, தான் உருவாக்கிய கருதுகோளைத் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாக விளக்கிக் கூறினார். ஆரியபட்டரின் பார்வையில் ஈர்ப்பு விசை என்பது பூமிக்கு உள்ள சிறப்புக் குணம். நியூட்டனோ பூமிக்கு மட்டுமல்ல, நிறை கொண்ட எல்லா பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு என்றார். மேலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் இரண்டு பொருள்கள் இடையே கண நேரத்தில் விசை செயல்படும் என்றார்.