

கல்வித் துறையில் எழும் சிக்கல்கள் சார்ந்த விவாதங்களில் தீர்வு நோக்கிய குரலை எழுப்பிவருபவர் தா.நெடுஞ்செழியன். உயர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உரிமைகளுக்காகவும் இவர் செயல்பட்டு வருகிறார். இந்திய உயர் கல்வித் துறையில் உள்ள வாய்ப்புகள், பிரச்சினைகள் குறித்து நெடுஞ்செழியன் அளித்த நேர்காணலின் சுருக்கம்:
உயர் கல்விக்கான ஆலோசனை வழங்குவதைச் சமூகத்தின் தேவையாக நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? - நான் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து, மென்பொருள் துறையில் பணிபுரிந்துவந்தேன். ஏறக்குறைய இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். அரசுக் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக, மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது நம் மாணவர்களுக்குத் தெரிவதில்லை. பெற்றோர்களோ தமிழ்நாட்டைத் தாண்டி யோசிப்பதே இல்லை. நம் குழந்தைகள் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்புகளைத் தேடித் தர வேண்டும் என 2002இல் உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் பணியைத் தொடங்கினேன்.