துருக்கி: போரும் சமாதானமும்!

துருக்கி: போரும் சமாதானமும்!
Updated on
3 min read

துருக்கி என்பதை ஆங்கிலத்தில் ‘டர்க்கி’ என்று உச்சரிப்பார்கள். அந்த வார்த்தையின் மற்றொரு பொருள் வான்கோழி. துருக்கியைப் பற்றிப் பள்ளிப் பாடங்களில் ஐரோப்பாவின் நுழைவாயில் என்று கூறுவார்கள். முதல் உலகப் போரில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் வென்றெடுக்கப்பட்டிருந்த ஆட்டமென் பேரரசு, துருக்கி தேசிய இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தால் 1923இல் ‘துருக்கி குடியரசு’ ஆனது. அநேகமாக ஐரோப்பாவின் ஒரு பகுதி அதன் கட்டுப்பாட்டில் இருந்தது.

துருக்கி ஆசிய நாடா, ஐரோப்பிய நாடா என்கிற விவாதங்கள்கூட உண்டு. ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கப்பட்டபோது, அதன் உறுப்பினராகச் சேர துருக்கி விருப்பம் தெரிவித்தும், இதர உறுப்பு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பியர்களுக்கு ஒவ்வாத நாடாகவும், ஆசிய நாடுகளுக்கு இனம் புரியாத நாடாகவும் துருக்கி விளங்குகிறது. ​

கார்ல் மார்க்ஸ் ஆங்கில மொழியின் மீதான அவரது கோபத்தை வெளிப்​படுத்து​வதற்கு, துருக்​கியையும் சேர்த்தே கூறினார். ‘ஆங்கில மொழி காட்டுமி​ராண்டி மொழி. ஒரு வார்த்தையை எழுத்தில் எழுதி​விட்டு, அதை வேறு விதமாக உச்சரிப்​பார்கள். உதாரணமாக ‘துருக்கி’ என்று எழுதி​விட்டு ‘கான்ஸ்​டாண்டி நோபிள்’ என்று ஆங்கிலேயர்கள் அழைப்​பதுதான் அபத்தத்தின் உச்சக்​கட்டம்’ என்று கார்ல் மார்க்ஸ் குறிப்​பிட்​டார். இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்​தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்​ததால் இந்தியாவின் விரோதி​யாகி
​விட்டது.

துருக்​கிக்கான தூதர்: இந்நிலை​யில், 80களில் துருக்​கி - இந்தியா தொடர்பாக நடைபெற்ற ஒரு சுவாரசியமான வழக்கை நினைவு​கூரலாம். 1980 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாஜா செரீப் திருவல்​லிக்கேணி தொகுதியி​லிருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். அவர் துருக்கி நாட்டின் வர்த்தகத் தூதராக நியமிக்​கப்​பட்​டார். அதனால், துருக்கி நாட்டுத் தேசியக் கொடியுடன் காரில் பவனி வந்து​கொண்​டிருந்​தார்.

துருக்கி நாட்டு வர்த்தகத் தூதரானதால் (பிரிவு 191(1)(d)), சட்டமன்ற உறுப்​பினர் பதவியி​லிருந்து அவரைத் தகுதி​யிழப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்​பட்டது. இப்படித் தகுதி​யிழப்பு செய்யும் அதிகாரம், பிரிவு 192இன் கீழ், மாநில ஆளுநருக்கு வழங்கப்​பட்​டுள்ளது.

அரசமைப்புச் சட்டம் (பிரிவு 191இல்) சட்டமன்ற உறுப்​பினருக்கான தகுதி வரையறுக்​கப்​பட்​டுள்ளது. அதில், (191(1)(d)) பிரிவின்படி ‘இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருப்​பினும் வேறொரு நாட்டுடன் பற்றோ அல்லது விசுவாசமோ கொண்டிருந்​தால், அந்த நபரும் இந்திய சட்டமன்றம் அல்லது நாடாளு​மன்​றங்​களில் உறுப்​பின​ராகப் பதவி வகிக்க முடியாது’ என்று கூறப்​பட்​டுள்ளது.

ஹாஜா செரீபை உறுப்​பினர் பதவியில் இருந்து தகுதி​யிழப்பு செய்யும்படி மார்க்​சிஸ்ட் சட்டமன்ற உறுப்​பினர் ஆர்.உ​மா​நாத்தும் வேறு சில உறுப்​பினர்​களும் ஆளுநரிடம் மனு ஒன்றைக் கொடுத்​தனர். ஆளுநர் அதைத் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு அனுப்​பி​னார். மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், மற்றொரு நாட்டின் வர்த்தகத் தூதராக இருப்​ப​தால், சட்டமன்ற உறுப்​பினர் பதவியை ஹாஜா செரீப் வகிக்க முடியாது என்று கருத்து தெரிவித்ததன் பேரில், அவரது உறுப்​பினர் பதவி ஆளுநர் உத்தரவின் மூலம் பறிக்​கப்​பட்டது.

எம்.எல்.ஏ. பதவி: ஹாஜா செரீப் அதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு 26.11.1981 அன்று விசாரணைக்கு வந்தது. ஆளுநர் உத்தர​வுக்குத் தடை கொடுக்கக் கூடாது என்றும், பதவிக் காலத்தில் சட்டமன்​றத்தில் பங்கு​கொள்ள அனுமதித்​தால், அவருக்கு ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்றும் நான் வாதாடினேன். ஆனால், தனி நீதிபதி இடைக்கால உத்தரவு வழங்கியதோடு, வழக்கு விசாரணைக் காலத்தில் அளிக்​கப்​படும் படித்​தொகைகளை அவருக்குக் கொடுக்கக் கூடாது என்றும் உத்தர​விட்​டார்.

பின்னர், மூன்று நீதிப​திகள் அமர்வு விசாரணைக்கு வழக்கை அனுப்​பி​னார். ஹாஜா செரீப்பின் ஐந்து வருடப் பதவிக் காலம் முடிவதற்குச் சில மாதங்​களுக்கு முன்பு​தான், மூன்று நீதிப​திகள் முன் வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. துருக்கியும் இந்தியாவும் நேச நாடுகள் என்றும் அவற்றுக்​கிடையே போர் ஏதும் நடக்காதபோது துருக்கி நாட்டுடன் பற்று அல்லது விசுவாசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் செரீப் சார்பாக கே.கே.வேணுகோபால் (முன்னாள் அட்டர்னி ஜெனரல்) வாதாடி​னார்.

போர் நேரடியாக இரு நாடுகளின் ராணுவம் மோதிக்​கொள்வது என்று சிலர் நினைப்​பார்கள். ஆனால், ‘போர் என்பது அரசியலின் மாற்று உபாயங்​களின் தொடர்ச்சியே’ என்று மார்க்​சிஸ்ட் சட்டமன்ற உறுப்​பினர் உமாநாத் தரப்பில் நான் வாதாடினேன். என்னுடைய தரப்பு வாதத்தை நீதிப​தி​களும் தீர்ப்பில் பதிவுசெய்​தார்கள். ஆனால், அவ்வார்த்தைகள் மாமேதை லெனினின் மேற்கோள் என்பதைக் கூறாமல் மறைத்து​விட்டேன் (War is the continuation of politics by other means).

வேறு நாட்டின் வர்த்தகத் தூதர் ஒருவர் மன்ற உறுப்​பினராக இருக்​கும்​பட்​சத்​தில், சட்டமன்​றத்தில் எடுக்​கக்​கூடிய வர்த்தகம் சம்பந்தமான தகவல்களை அந்நாட்டுக்குக் கசியவிடும் அபாயம் உள்ளது என்பதால், சமாதான காலத்​திலும் நாட்டின் இறையாண்​மைக்கு ஆபத்து வரலாம் என்கிற அடிப்​படையில் ஆளுநர் உத்தரவில் உயர் நீதிமன்றம் குறுக்கிட மறுத்து​விட்டது. ஹாஜா செரீப்​புக்குப் பதவி போனது.

தற்போது துருக்கியும் இந்தியாவும்: வர்த்தகத் தூதர் விவகாரம், போர் இல்லாத காலத்தில் நடைபெற்ற வழக்கு. ஆனால், போர் என்று வந்து​விட்டால் நிலைமையே வேறு. சென்னை விமான நிலையத்தில் துருக்​கியைச் சேர்ந்த ‘செலிபி’ என்கிற நிறுவனம், தரையிறங்கும் விமானங்​களுக்குத் தரைத்தள உதவி செய்வதற்கான உரிமம் பெற்றிருந்தது. பாகிஸ்​தானுக்குத் துருக்கி ஆதரவு என்றவுடன், துருக்கி மீது கோபக்​கணையை இந்திய அரசு வீச ஆரம்பித்தது. அதன் முதல் ‘அக்னி ஏவுகணை’ செலிபி நிறுவனத்தின் மீது திரும்​பியது.

சிவில் விமான டைரக்டர் ஜெனரல் அந்நிறு​வனத்​துக்குக் கொடுத்த பாதுகாப்புத் தடையாணையைத் திரும்பப் பெற்றார். நிறுவனத்தின் உரிமம் செயலிழந்தது. ஆனால், அதன் கீழ் வேலைபார்த்த ஊழியர்கள் மற்ற உரிமம் பெற்ற நிறுவனங்​களின் கீழ் வேலை பார்ப்​பார்கள் என்று கூறப்​பட்டது.

விமான நிலையப் பாதுகாப்பு முக்கியம் என்றாலும் துருக்​கியி​லிருந்து வரும் ஆப்பிளுக்கும் ஆபத்து வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளி​லிருந்து ஆப்பிள் பழத்தை வரவழைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் சங்கம், ‘இனி துருக்​கியில் இருந்து ஆப்பிள் வாங்க மாட்டோம்’ என்று அறிவித்​துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போர் நிறுத்​தத்​துக்குப் பிறகும் தனது நடவடிக்கைகள் தொடரும் என்று இந்திய அரசு கூறுவது, இந்த ஆப்பிள் இறக்குமதி தடைக்​குத்தானோ என்று எண்ண வேண்டி​யுள்ளது. ‘போர் என்பது தொடர்ச்சியான அரசியலின் மாற்று நடவடிக்கை’ என்று கூறிய லெனின், தீர்க்​கதரிசி என்பதில் மாற்றுக்​கருத்து உண்டா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in