

பாகிஸ்தானின் தீவிரவாத தொடர்பு குறித்து உலக நாடுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்க வெளிநாடு செல்லும் ஒரு குழுவுக்கு தலைமை தாங்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை நியமித்துள்ளது மத்திய பாஜக அரசு. இதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக 4 எம்.பி.க்களின் பெயர்களை பரிந்துரைக்க காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொண்டது மத்திய அரசு. அதற்கு ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், சயத் நசீர் உசைன், அம்ரிந்தர் சிங் ராஜா ஆகிய 4 பெயர்களை அனுப்பி உள்ளது காங்கிரஸ். அதே நேரத்தில் எம்.பி.க்களின் ஒரு குழுவுக்கு சசி தரூரை நியமித்தது மத்திய அரசு. இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
பல்வேறு சர்வதேச அரங்குகளில் உரையாற்றியவர் சசி தரூர். ஐ.நா.வில் பணியாற்றி இருக்கிறார். திறமையான, பேச்சு திறனுள்ள ஒருவரை நாட்டின் சார்பில் உலக நாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி பரிந்துரைப்பதில் தவறில்லை. அதைவிட, சசி தரூரை மத்திய அரசு நியமித்துள்ளதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல், 26 பேர் உயிரிழப்பு, ஆபரேஷன் சிந்தூர் என்று நாடுஇக்கட்டான நிலையில் இருக்கும் நிலையில், எல்லாவற்றையும் அரசியலாகப் பார்ப்பது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல. நாடு என்று வரும் போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவும், ராஜீவ் காந்தியும் எப்படி செயல்பட்டார்கள் என்பது வரலாறு.
இதே பாகிஸ்தான் ஐ.நா. சபையில் இந்தியா மீது பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்ட போது, அதற்கு சரியான பதிலடி கொடுக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவாஜ்பாயை ஐ.நாவுக்கு அனுப்பி வைத்தார் நரசிம்மராவ். அப்போது இந்தியா சார்பில் ஐ.நா.வில் சிறப்புமிக்க உரையாற்றி வெற்றியுடன் திரும்பினார் வாஜ்பாய்.
கடந்த 1988-ம் ஆண்டு 2-வது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார் வாஜ்பாய். அப்போது, இந்தியா சார்பில் ஐ.நா. சென்ற குழுவில் வாஜ்பாயை சேர்த்தார் ராஜீவ் காந்தி. அந்த பயணத்தின் போது சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெறவும் வசதியாக இருக்கும் என்று நினைத்தார் ராஜீவ். இப்படி நாடு என்று வரும் போது கட்சி சார்பற்ற நிலையில்தான் இந்திய தலைவர்கள் இருந்துள்ளனர்.
‘‘மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைத்து எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமையேற்க சொன்னார். இதில் அரசியல்எதுவும் இல்லை’’ என்கிறார் சசி தரூர். காங்கிரஸ் கட்சி உங்களை அவமானப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, ‘‘என் தகுதி எனக்கு தெரியும். என்னை யாரும் அவமானப்படுத்த முடியாது. என்னை பொறுத்த வரையில் நாடு சிக்கலில் இருக்கும் போது, குடிமக்களின் உதவியை மத்திய அரசு கேட்கும் போது, வேறு என்ன பதிலை சொல்ல முடியும்’’ என்று தெளிவாக பதில் கூறியுள்ளார்.
இப்போது வெளிநாடு செல்லும் குழுவில் அவர் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்க மறுத்ததும், மத்திய அரசு அவரை தலைமை தாங்க சொல்வதும் அரசியல் விளையாட்டாகவே உள்ளது.