

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இங்குத் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் அறிவிப்புகள், தமிழ்ப் பெயர்ப் பலகைகள், தமிழ்க் குரல்கள் எல்லாம் இருந்தாலும் இதுவரை இங்கு தமிழ்ப் புத்தகங்களுக்கான திருவிழா இதுவரை ஒருங்கிணைக்கப்பட்டதே இல்லை. முதல் முறையாகத் தமிழ்ப் புத்தகத் திருவிழா கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சிங்கப்பூர் விடுதலை பெற்றதன் 60ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகஇம்மாதம் 9 - 11ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்றது. சிங்கப்பூர்த் தேசிய நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த 20 தமிழ்ப் பதிப்பகங்கள் பங்கேற்றன. சிங்கப்பூரிலும் புத்தகத் திருவிழா நடத்த முடியும் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளது.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒருங்கிணைப்பில், தேசியக் கலை மன்றம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வளர்தமிழ் இயக்கம், தேசிய நூலக வாரியம் உள்ளிட்ட பல அமைப்புகளின் ஆதரவோடு இந்தப் புத்தகத் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இங்குப் புத்தகத் திருவிழா பணிகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியவர் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன். “சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த முடியுமா என்ற பெரும் தயக்கத்துடன்தான் இதற்கான பணிகளைத் தொடங்கினோம். எனினும் வியப்பூட்டும் வகையில் பெரும் ஆதரவு கிடைத்தது. இப்போது மிகச் சிறப்பாகப் புத்தகத் திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறோம். திருப்தியளிக்கும் வகையில் விற்பனை நடந்துள்ளதாகப் பதிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், தொடர்ந்து இங்குப் புத்தகத் திருவிழாக்களை நடத்த முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசோடு கலந்து ஆலாசித்து, அவர்களின் ஆதரவோடு புத்தகத் திருவிழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார் ஆண்டியப்பன்.