உணவு பாதுகாப்புத் துறை வேலை செய்கிறதா?

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
2 min read

பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயனைஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் பயன்படுத்துவதற்கு ஓர் ஆண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், அதையும் மீறி உணவகங்களில் மயனைஸ் பயன்பாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் 4 பேர் சிக்கன் நூடுல்ஸ், மயனைஸ் கலக்கப்பட்ட ஷவர்மா சிக்கன் ஆகியவற்றை சாப்பிட்டதில் வாந்தி, பேதி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அதேபோன்று, சென்னை மணலி பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மனைவி பிரபல தனியார் உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கிச் சென்று சாப்பிட்டபோது, அதில் சங்கு சிப்பி இருந்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் சமைக்கப்பட்ட அந்த உணவைச் சாப்பிட்டதில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தனியார் உணவகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு நிலைமை மோசமடைந்த பின்னர் மணலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை மட்டுமின்றி, அனைத்து ஊர்களிலும் உணவகங்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. இளைஞர்கள் பல்வேறு உணவகங்களை தேடிச் சென்று சாப்பிடுவதுடன், ‘ரிவியூ’ என்ற பெயரில் காணொலி உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். சுமார், சாதாரணம், மோசம் என்ற பட்டியலில் வரும் உணவகங்கள் கூட இளைஞர்களின் இத்தகைய செயல்களால் பிரபலமடைந்து கூட்டம் அலைமோதும் நிலையைச் சந்திக்கின்றன.

இதுதவிர, இரவு 10 மணிக்கு மேல் வீடுகளில் இருந்து கிளம்பி இரவு நேர உணவகங்களாக தேடிச் சென்று அதிகாலை வரை பல்வேறு உணவுகளை ருசிக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. அதைப் பயன்படுத்திகொள்வதற்காக ‘மிட்நைட் பிரியாணி, அதிகாலை 3 மணி பிரியாணி’ கடைகள் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கி விட்டன.

மக்களை ஈர்க்க பார்வையில் படும்படி தொங்க விடுகிறோம் என்ற பெயரில் சாலையில் வாசலிலேயே வைத்து அசைவ உணவுகளை வறுப்பது, தாளிப்பது போன்ற செயல்கள் அதிகரித்து விட்டன. சுகாதாரமற்ற முறையில் சாலையில்வைத்து சமைக்கப்படும் இத்தகைய உணவுப் பொருட்களின் தரம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுபோன்ற உணவகங்களில் சமைக்கப்படும் உணவின் தரத்தை பரிசோதிக்க வேண்டிய உணவுப் பாதுகாப்புத் துறைவேலை செய்கிறதா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

முதல் நாள் மீதமாகும் அசைவ உணவுகளை மறுநாள் அடுப்பில் காட்டி மீண்டும் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட காரணத்தினால், தரமற்ற உணவுகளை சாப்பிடுவோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

புற்றீசல் போல பெருகிவிட்ட உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகளை உருவாக்குவதுடன், அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் உணவுத்துறை தீவிரமாக கண்காணிப்பதே மக்களை காக்கும் வழி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in