

சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே 4,735 ஏக்கர் அரசு நிலத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையின் பட்ஜெட் தொடரின்போது அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கோரியுள்ளது பாராட்டுக்குரியது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று கூறப்படுவது இன்னும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
தற்போது சென்னை மக்களுக்கு புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன் மொத்த கொள்திறன் 13.2 டிஎம்சி.
திருப்போரூரைச் சுற்றியுள்ள 69 ஏரிகளில் இருந்து வரும் 2.97 டிஎம்சி உபரிநீர் அப்பகுதியில் தேங்கி, பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்குச் செல்வதால் இதை நீர்த்தேக்கம் அமைப்பதன் மூலம் குடிநீராக பயன்படுத்தலாம் என்ற அரசின் எண்ணம் தொலைநோக்குத் திட்டமாகும். கடலுக்குச் செல்லும் நீரில் 1.6 டிஎம்சி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் சென்னை நகர மக்களுக்கு குறிப்பாக சோழிங்கநல்லூர், நாவலூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட மாமல்லபுரம் வரை உள்ள மக்களின் குடிநீர் தேவை நிறைவேறும் என்பது மக்கள் நலன்சார்ந்த அரசின் நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. இத்திட்டத்தை எந்த தாமதமுமின்றி உரிய காலத்தில் நிறைவேற்ற அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் சென்னைப் பெரு நகரத்திற்கு தற்போது குடிநீர் வாரியத்தின்மூலம் 1,040 எம்எல்டி (மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு) தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், தேவை 1,400 எம்எல்டி ஆக உள்ளது. வரும் 2030ம் ஆண்டு 2,365 எம்எல்டி ஆக தேவை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மனிதர்களின் அடிப்படைத் தேவையாக உள்ள குடிநீருக்கான திட்டங்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது.
மக்கள்தொகை எண்ணிக்கை சென்னை நகரில் தற்போது 87 லட்சமாக உள்ளது. இந்தியாவிலேயே நான்காவது பெரிய நகரமாகவும், ஒரு சதுர கி.மீட்டருக்கு 16,000 பேர் என்ற அளவில் நெருக்கடி மிகுந்த நகரமாகவும் உள்ள சென்னைக்கு குடிநீர் உள்ளிட்ட ஏராளமான அடிப்படை கட்டமைப்புகளும் திட்டங்களும் தேவைப்படுகிறது.
தமிழகத்திலேயே பெரிய சட்டசபை தொகுதியாக உள்ள சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதியில் பல லட்சம் குடும்பங்கள மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏழை, எளிய மக்களான அவர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் நிச்சயம் பலனளிக்கும்.
மக்கள்தொகை பெருக்கம், நகர விரிவாக்கம் என்பது சென்னைக்கு மட்டுமானதல்ல. தமிழகத்தின் பல நகரங்கள் விரிவடைந்து கொண்டே வருகின்றன. அதற்கேற்ப அடிப்படை வசதிகளான குடிநீர், போக்குவரத்து, சாலை மேம்பாடு, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களை எதிர்கால தேவையையும் மனதில் கொண்டு அனைத்து நகரங்களுக்கும் உருவாக்குவது அவசியம்.