

சாலை விபத்தில் காயம் அடைவோருக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்திருப்பது மிக அவசியமான ஒரு நடவடிக்கை. எனினும், சாலை விபத்துகளுக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவதிலும் உயிரிழப்பைத் தடுப்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் தரவுகளின்படி, இந்தியாவில் 2022இல் ஏறக்குறைய 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.
ஒரு நாளைக்குச் சராசரியாக 462 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் நிலையே தற்போதுவரை நீடிக்கிறது. அவசர கால சிகிச்சையை உறுதிப்படுத்தினால், பெருமளவில் உயிரிழப்புகளையும் தீவிரக் காயங்களையும் குறைக்க முடியும். எனினும், ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலை அதற்குத் தடையாக உள்ளது. காயமடைந்தோரை இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கான சாத்தியங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிகரிக்க முயன்றுவருகின்றன.