

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நான்கு ஆண்டு ஆட்சியின் முடிவில் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி நேர்மறையான விமர்சனங்களைப் பெறும் அதேநேரம், தேர்தல் அறிக்கையில் கூறிய சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டுவருகிறது.
இந்த ஆண்டு மே 7ஆம் தேதி நான்கு ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டில் ஸ்டாலின் அரசு அடியெடுத்து வைத்துள்ளது. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கரோனா நிவாரண நிதி ரூ.4,000, மகளிருக்கான விடியல் பேருந்துப் பயணம், பால் விலை குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டது வரவேற்பைப் பெற்றது. பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.