

ஐ.நா.வின் உலகளாவிய தேசிய மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஜெனிவாவில் மார்ச் மாதம் தனது 45ஆவது கூட்டத்தை நடத்தியது. இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த முதன்மைத் தர அங்கீகாரத்தை விலக்கிக்கொள்வது என அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வாக்களித்தல் உள்ளிட்ட உரிமைகளை இந்திய ஆணையம் இழக்கும்; அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும். எனினும் ஆணையம் தன் செயல்பாடுகளையும் சட்டக் கட்டமைப்புகளையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு தருவதற்காக இந்தத் தர இறக்கத்தை ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தாமல் இருக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது. இது இந்திய மனித உரிமை ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு.