

எல்லை தாண்டி வந்து இந்திய குடிமக்களின் உயிரைப் பறித்த பாகிஸ்தானிய தீவிரவாதிகள் அங்கிருந்த மற்ற சுற்றுலா பயணிகளிடம், ‘‘போய் … இதை மோடியிடம் சொல்லுங்கள்’’ என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்குமே விடுக்கப்பட்ட கொக்கரிப்பான சவாலாகத் தான் இது பார்க்கப்பட்டது.
இந்தியா ஏன் இன்னும் பதிலடி கொடுக்கவில்லை என்று பலரும் பலவிதமான ஊகங்களை ஆதங்கத்தோடும், தவிப்போடும் வெளியிட்டு வந்த நிலையில், அதிகாலையில் இந்தியமண்ணில் இருந்து புறப்பட்ட ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் பாகிஸ்தான் சீராட்டி வளர்த்து வந்த தீவிரவாத முகாம்களை துல்லியமாக அழித்தபோது தான் இந்தியாவின் பலமும் திறமையும் உலக நாடுகளுக்கு முழுமையாக புரியவந்தது.
அதேசமயம், இந்தியா ஏன் திருப்பித் தாக்கவில்லை என்று கேலியும் கிண்டலுமாக சமூக ஊடகங்களில் சொந்ததேசத்தையே சந்தேகத்துடன் சிலர் பார்த்த வேதனையான நிகழ்வும் அரங்கேறியது. ஆனால், இந்த துல்லியமான தாக்குதல் நடந்து முடிந்தவுடன் இதே நபர்கள் அஹிம்சையின் அருமையைப் பற்றி போதிக்கத் துவங்கியபோது, அவர்கள் நிஜ முகம் கிழிபட்டது.
இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக மறுபடியும் கேலி கிண்டல் குரல்களை எழுப்பினார்கள் சில வக்கிரகாரர்கள். அதேசமயம், பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவத்திற்கு சேதம் ஏற்பட்டதாக வெளியான செய்திகளை முன்வைத்து அற்ப சந்தோஷம் அடைந்தவர்களும் உண்டு. ஆனால், அப்படிப்பட்ட சேதம் குறித்து ஓரிரு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டனவே தவிர, இந்திய அரசோ, ராணுவமோ அதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர் என்பதே கூடாது; அது இருதரப்புக்கும் நஷ்டத்தை விளைவிக்க கூடியது என்ற வாதத்தை யாரும் இங்கே மறுக்கவில்லை. அதேசமயம், அக்கிரமக்காரர்களின் வெறித்தனம் எல்லை தாண்டி, நம் தேசத்தின் இறையாண்மைக்கே சவால் விடும்போது அப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதைவிட பெரிய கோழைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.
இந்தியா நடத்திய தாக்குதலைக் கண்டு இன்று உலகத்தின் பல தேசங்களும் பிரம்மிப்படைந்திருக்கின்றன என்பது தான் உண்மை. நமது நாட்டின் ஆயுத பலம் அதை இயக்கும் திறமையான முப்படைகளின் பலம்,முப்படைகளுக்கும் பக்க பலமாக இருக்கும் ஆட்சியாளர்களின் ராஜதந்திரம் அதற்கெல்லாம் உச்சமாக வெளிப்பட்டிருக்கும் குடிமக்களின் தேசபக்தி ஆகியவற்றைக் கண்டு அத்தனை நாடுகளுமே இந்தியாவை முன்னிலும் ஒரு உயர்ந்த கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியுள்ளன.
போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துகிறோம் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் காட்டும் ‘ஆர்வத்தை’ மிக சாமர்த்தியமாக பின்னுக்குத் தள்ளி எங்கள் முடிவுகளை நாங்களே எடுத்துக் கொள்வோம் என்று இந்திய அரசு விடுக்கும் மறைமுகமான செய்தியும் நம் எதிர்காலத்திற்கு வலு சேர்ப்பதே ஆகும்.