

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதாவது 95.03 சதவீத தேர்ச்சி என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையின் கூட்டு முயற்சியால் கிடைத்த அபார வெற்றியாகும். கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோல, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். வெற்றி பெற்ற மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி புதிய வளரும் துறைகளையும் கண்டறிந்து உயர்கல்வி பெற்று வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டும்.
அதேநேரம், 39 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனது வருத்தமளிக்கும் விஷயமாக இருந்தாலும், அவர்களுக்கும் வாய்ப்பில்லாமல் போகவில்லை என்பதை அந்த மாணவர்கள் உணர வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அதேவேளையில், ‘‘தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் துவண்டு விடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றிபெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதி செய்யும்’’ என்று ஆறுதலான வார்த்தைகளை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
தோல்வியே வெற்றிக்கான படிக்கட்டுகள் என்று சொல்வதைப் போல, இன்றைய தோல்வியால் மாணவர்கள் துவண்டு விடாமல் அடுத்து என்ன செய்யலாம்; மீண்டும் வெற்றிபெற என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்றிரண்டு பாடங்களை தவறவிட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியைப் பெற முடியும். அந்த வாய்ப்பும் தவறினால் மீண்டும் பள்ளிக் கல்வியை தொடர்ந்து பொதுத்தேர்வில் வெற்றிபெற எந்த தடையும் இல்லை.
இதுதவிர, துணைத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி மாணவர்களை வெற்றிபெறச் செய்வதற்கான திட்டங்களும் கல்வித்துறையின் முயற்சியில் நடைபெறுகின்றன. மணற்கேணி ‘ஆப்’ மூலம் வகுப்பறையில் புரியாத பாடங்களை காணொலி மூலம் கேட்டு, கற்று, புரிந்து கொள்வதற்கான வசதிகளையும் கல்வித்துறை வழங்கி வருகிறது.
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு வசதியாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை இணைய தளங்கள் வாயிலாகவும் கல்வித்துறை தொகுத்து வழங்கி வருகிறது. இதுபோன்று கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு மாணவர்கள் மீண்டும் முயற்சி எடுத்து தேர்ச்சி பெறுவதில் அக்கறை காட்ட வேண்டும். அதன்பிறகு கல்வித்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் உயர்கல்வி வழிகாட்டி வசதிகளையும் பயன்படுத்தி வீட்டுக்கும் நாட்டுக்கும் மாணவர்கள் பெருமை சேர்க்க வேண்டும்.