

“ஓர் உண்மையைத் தகவலாகக் கொடுப்பதைவிடவும் அதை ஒரு கதைக்குள் வைத்துத் தந்தால், சுமார் 22 மடங்கு காலம் அதிகமாக அவரின் நினைவில் தங்கும்” என்கிறார் அமெரிக்க உளவியலாளர் ஜெரோம் புருனர். வீட்டுக்குள் குழந்தைகளாக இருப்பவர்கள், பள்ளிக்குள் நுழைந்ததும் மாணவர்களாகிவிட முடியுமா? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கிறோம்; குழந்தைமையை வியக்கிறோம்; அறியாமை களைய உதவுகிறோம்.
ஆனால், பள்ளியில் மாணவரானதும் குறும்புகள் தண்டனைக்கு உரியதாகிவிடுகின்றன. குழந்தைமை, ஒழுங்கின்மையாகப் பார்க்கப்படுகிறது. அறியாமைக்கு முட்டாள்தனம் எனப் பெயர் சூட்டப்படுகிறது. குழந்தை – மாணவர் என்னும் சொற்கள் எல்லாமே பெரியவர்களான நமக்குத்தான். குழந்தைகளுக்குத் தாங்கள் குழந்தைகள் என்பதுகூடத் தெரியாது. அவர்களால் பள்ளிச் சீருடை அணிந்த உடனே குழந்தையிலிருந்து மாணவராகக் கூடு விட்டுக் கூடு பாய முடியாது.