

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்ததில் இருந்தே இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் இருந்து வந்தது. ஒருவழியாக அந்த சம்பவம் நள்ளிரவில் நடந்து முடிந்திருக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்கள், பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள் என 9 இடங்களை இந்திய பாதுகாப்பு படை குறிவைத்து ஏவுகணை மூலம் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. இவை அனைத்தும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களாக செயல்பட்டவை என்று ராணுவம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் இந்த பதிலடிக்கு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியே தலையிட்டு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று இந்தியப் பாரம்பரிய உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பெயர் வைத்திருப்பது இன்னும் சிறப்பாகவே அமைந்துள்ளது.
“இந்த நடவடிக்கை பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை மட்டுமே குறிவைத்து, பதற்றத்தை தூண்டாத வகையில் அளந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இலக்குகளை தேர்வு செய்வதிலும், அதை செயல்படுத்துவதிலும் இந்தியா மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட்டுள்ளது” என்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொருள் மிகுந்தவை.
எங்கள் நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அழிப்பதே எங்கள் எண்ணம். பாகிஸ்தானுடன் போர் நடத்துவதோ, எல்லையை ஆக்கிரமிப்பதோ, அப்பாவி மக்களை கொல்வதோ எங்கள் நோக்கமில்லை என்பதே இதன் பொருள். இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மறுத்தாலும், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் என்பதற்கான ஆதாரங்களை இந்தியா சேகரித்து வைத்துள்ளது. அப்பாவி மக்களைத் தாக்கிய சம்பவத்துக்கு பதிலடி கொடுத்தாகிவிட்டது. அடுத்தது என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்தியாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவோம் என்ற பாணியில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி பேசியிருப்பது அந்நாட்டுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்கு நிச்சயம் இந்தியாவிடம் இருந்து மீண்டும் பதிலடி கிடைக்கும்.
பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கும் செயலை பாகிஸ்தான் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. போர் எத்தகைய அழிவையும் நஷ்டத்தையும் உண்டாக்கும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேசமயம், அநீதி வழியில் அநியாயமாக மிரட்ட நினைப்போருக்கு பாடம் கற்பிக்கும் இறுதி ஆயுதமாக இத்தகைய தாக்குதலை இந்தியா தொடுத்திருக்கிறது.
இது, இந்தியா என்பது அஹிம்சை தேசம் மட்டுமல்ல; அடாவடிக்காரர்களை அடக்குவதற்கு தேவைப்பட்டால் ஆயுதமும் எடுக்க தயங்காத தேசம்தான் என்று உணர்த்தும் சரியான செயலே ஆகும்.