

20ஆம் நூற்றாண்டில் வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் நீட்சியாக விளங்கிய கவிகுரு ரவீந்திரநாத் தாகூர், கவிஞர், பாடலாசிரியர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இசை வல்லுநர், நாடக ஆசிரியர், ஓவியர், கல்வியாளர், தேசபக்தர், சர்வதேசவாதி, மனிதநேயர், தீர்க்கதரிசி, வழிகாட்டி, தத்துவஞானி என்கிற வகைகளில், தனது பன்முகத் தன்மையின் மூலம், அப்போது விடுதலைக்குப் போராடிவந்த இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதற்குமே பல்வேறு வழிகளில் தன் கருத்துகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.
தேசத்தின் பாதை: இந்தியா எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தாகூர் தெளிவுபடச் சுட்டிக்காட்டினார். ‘இந்தியா தன் எதிர்காலத்தைத் தானே நிர்ணயிக்க வேண்டும்; நவீன காலத்தை மேற்கொள்வதென்ற பெயரால், அது தன் கடந்த காலத்தை ஒருபோதும் ஒளித்து மறைத்துவிடக் கூடாது; கீழைத்தேயமும் மேற்குலகும் வழங்கும் மிகச்சிறந்த அம்சங்களை எடுத்துக் கொண்டு, இணக்கமிக்க புதியதொரு கலாச்சார வடிவத்தினை அது உருவாக்க வேண்டும்; அதற்குக் கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால வரலாற்றையும் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம்’ என்பதையும் அவர் முன்வைத்தார்.