நீதிபதிகளின் சொத்து விவரம் வெளியிட்டது நல்ல முயற்சி!

நீதிபதிகளின் சொத்து விவரம் வெளியிட்டது நல்ல முயற்சி!
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதில் வரும் 13-ம் தேதி ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோரின் சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.

சொத்து விவரங்களை வெளியிட்டுள்ள நீதிபதிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரும் உள்ளனர். சொத்து விவரங்கள் வெளியிட்டுள்ள நீதிபதிகளில் அதிகபட்சமாக ரூ.120 கோடி வரை தனக்கு சொத்து இருப்பதாகவும், ரூ.91 கோடி வரை கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் வெளியிட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற முடிவை 2009ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்ற முழு அமர்வு எடுத்தது. சொத்து விவரங்களை தாக்கல் செய்த நீதிபதிகளின் பெயர் மட்டுமே இவ்வளவு காலமாக இணைய தளத்தில் இடம்பெற்றது.

கடந்த மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் எரிந்த நிலையில் எடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, நீதிபதிகளின் சொத்து விவரங்கள் குறித்த விவாதம் மக்கள் மத்தியில் பேசுபொருளானது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகளின் பெயர் மட்டுமின்றி, சொத்துகளின் முழு விவரங்களையும் வெளியிடுவது என்றமுடிவை உச்ச நீதிமன்ற முழு அமர்வு எடுத்து அதன்படி வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்துள்ள நேரத்தில், சொத்து விவரங்களை மக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும்.

இதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமன முறை மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமன முறைகுறித்த நடைமுறைகளையும் உச்சநீதிமன்றம் இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் பாரபட்சமாக நீதிபதிகளை நியமிக்கிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதியை மாநிலமுதல்வர்கள் பரிந்துரை செய்யும் விவரமும் இடம்பெற்றுள்ளது.

சாதாரணமாக பொதுமக்கள் அறிந்திராத இந்த விஷயம் தற்போது பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த நீதிபதிகளுக்குள் மட்டுமே ரகசியமாக வைக்கப்படும் சில விஷயங்களை நாட்டு மக்களும் அறிந்து கொள்ளும்படி வெளியிட்டிருப்பது, நீதிபதிகளின் நியமன முறை குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். மக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த முயற்சி உச்ச நீதிமன்ற நீதிபதிகளோடு நின்று விடாமல் சிறு வழக்குகளை விசாரிக்கும் மாஜிஸ்ட்ரேட் வரை நீட்டிப்பது நீதித்துறைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in