சாட்பாட்டிடம் நன்றி சொல்வதால் சூழலியல் பிரச்சினை வருமா?
‘தயவு செய்து’ என்று சொல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆங்கிலப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஏ.ஜி.கார்டினர் அழகான கட்டுரை (On Saying Please) ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தச் சொல்லோடு ‘நன்றி’ என்னும் சொல்லின் அருமையையும் தேவையையும் நாம் அறிந்தே இருக்கிறோம். இருப்பினும், ஏஐ யுகத்தில் இந்த இரண்டு சொற்களும் தேவையில்லாத இடையூறுகள் என்னும் எண்ணத்தை சாட்ஜிபிடி ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னிடம் பணிவுடன் கேள்வி கேட்கப்படுவதையும், பதிலுக்கு நன்றி சொல்லப்படுவதையும் சாட்ஜிபிடி எதிர்பார்க்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், அதன் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யின் நிறுவனர் சாம் ஆல்ட்மன் அண்மையில் சாட்ஜிபிடியிடம் பயனாளிகள் ‘தயவுசெய்து’, ‘நன்றி’ ஆகிய சொற்களைச் சொல்லிக்கொண்டிருப்பதால் ஏற்படும் இழப்பு பற்றிக் கவலை தெரிவித்திருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
