

வெளிநாடுகளில் தயாராகி அமெரிக்காவுக்கு வரும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு, திரைத்துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஹாலிவுட்டில் தயாராகும் திரைப்படங்கள் உலகம் முழுக்க திரையிடப்பட்டு வசூலை அள்ளிக் குவித்த காலம் மாறிவிட்டது. சமீபகாலமாக ஹாலிவுட் திரைப்படங்கள் வசூலில் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஹாலிவுட் வருமானம் 40 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாகவே, ஹாலிவுட்டை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ட்ரம்ப். ஹாலிவுட்டில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இதர நாடுகள் சலுகைகள் அளித்து இழுப்பதால், அமெரிக்க திரைத்துறை பாதிப்பை சந்திக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். ட்ரம்ப் அறிவிப்பை அடுத்து ஹாலிவுட் திரைப்படங்களை இறக்குமதி செய்து திரையிடுவதற்கு சீனாவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நாட்டு பொருளாதாரத்தை சீர்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் உலகம் முழுக்க மற்ற நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்திய திரைப்படங்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் திரையிடப்பட்டு இந்திய திரைத்துறைக்கு கணிசமான வருவாயை பெற்றுத் தருகிறது.
குறிப்பாக, தென் மாநிலங்களைச் சேர்ந்த பலர் அமெரிக்காவில் இருப்பதால் தென்னிந்திய திரைப்படங்கள் உடனுக்குடன் திரையிடப்பட்டு வசூலை அள்ளிக் குவித்து வருகின்றன. ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கையால் இந்திய திரைத்துறையின் வருமானமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதில் வரியாக மற்ற நாடுகளும் வரிவிதிப்பில் இறங்கினால், ஏற்கெனவே சரிவில் உள்ள ஹாலிவுட் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அந்நாட்டின் திரைத்துறையினர் கவலையை வெளிப்படுத்தினாலும் அதை அமெரிக்க அதிபர் பொருட்படுத்தவில்லை.
பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கைக்கு பிறகு, உலகம் முழுக்க இருந்த வர்த்தக தடைகள் நீக்கப்பட்டு, அதன்மூலம் பல நாடுகள் பரஸ்பரம் பலன் அடைந்து வருகின்றன. இதில் பலனடைந்த பல்வேறு துறைகளில் திரைத்துறையும் ஒன்று. இந்திய திரைப்படங்கள் உலக அளவில் திரையிட்டு வருவாய் ஈட்டும்போது, அதற்கேற்ப பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கும் அளவுக்கு திரைத்துறை வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் எடுத்துவரும் நடவடிக்கையால் வர்த்தக வளர்ச்சி பின்னோக்கி நகர்ந்து, மீண்டும் பட்ஜெட் படங்களை எடுக்கும் பழைய நிலைக்கு திரும்பும் நிலை ஏற்படும்.
உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா 2-வது நாடாக வளர்ந்துள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் சீனாவால் அமெரிக்காவை முந்திச் செல்ல முடியும் என்பதால், சீனாவுக்கு முட்டுக்கட்டை போட நினைத்து அமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் பாதிப்படையச் செய்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வளர்ச்சியை தக்கவைக்கவும், இன்னும் வளரவும், ட்ரம்ப் போன்றவர்கள் கொண்டுவரும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை இந்தியா ராஜதந்திரங்களை பயன்படுத்தி முறியடிக்க வேண்டும். அதன்மூலம் இந்திய திரைத்துறை வளர்ச்சியையும் தக்க வைக்க முடியும்.