

திருப்பூர் அருகே குள்ளாப்பாளையம் என்ற இடத்தில் பாலத்துக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தில் விழுந்து நாகராஜ் என்பவரும், அவரது மனைவி ஆனந்தியும் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பள்ளத்தில் விழுந்த அவர்களது 12 வயது மகள் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குண்டடம் பகுதியை சேர்ந்த அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் இந்தவிபத்து நேரிட்டுள்ளது.
பிரதான சாலையில் 10 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் ஓர் இடத்தில் வாகன ஓட்டிகள் நெருங்காமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படாதது அலட்சியத்தின் உச்சம். அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் பள்ளம் இருப்பதே தெரியாத வகையில் இருள்சூழ்ந்திருப்பது மற்றவர்களின் பாதுகாப்பை துச்சமென மதிக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.
இரவு நேரத்தில் விபத்து நடந்து பலத்த காயமடைந்த மூவரும் காப்பாற்ற யாருமின்றி இரவு முழுக்க பள்ளத்திலேயே விழுந்து கிடந்துள்ளனர். காலையில் சிலர் பார்த்து சிக்கியவர்களை வெளியில் கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகே உரிய நேரத்தில் அவசர உதவி கிடைக்காமல் இருவரும் உயிரிழந்திருப்பதும், சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு பாதுகாப்பற்ற முறையில் பாலப் பணிகள் நடந்து வருவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பாலம் கட்டுதல், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் என பள்ளம் தோண்டப்படாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பணிகள் நடந்து வருகின்றன.ஆனால், அவற்றில் பாதுகாப்பு அம்சங்களை துளியும் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்வது சகித்துக் கொள்ள முடியாதது.
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள், போக்குவரத்து மாற்றம், கட்டுமான பொருட்கள் கீழே விழாதபடி வலை அமைத்தல் என உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. அதில் 50 சதவீதத்தைக்கூட உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் பின்பற்றுவது இல்லை.
உயிரிழப்பு குறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், இத்துடன் இச்சம்பவத்தை ஒதுக்கிவிட முடியாது. மக்களின் பாதுகாப்பில் இந்த அளவுக்கு அலட்சியமாக இருந்தஒப்பந்ததாரர் எந்தக் கட்சி சார்புடையவராக இருந்தாலும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமானப் பணிகளின்போது எந்த அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக அறிவித்துதமிழகம் முழுக்க பின்பற்றச் செய்ய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க முடியும்.