Published : 11 Jul 2018 08:44 AM
Last Updated : 11 Jul 2018 08:44 AM

ஊழலை ஒழிக்குமா தமிழ்நாடு லோக் ஆயுக்தா?

டந்த 2013-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியது. ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் கொடுத்த அழுத்தத்தாலேயே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் சனவரி 2014 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

அச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலமும், அம்மாநிலத்துக்கான லோக் ஆயுக்தா சட்டத்தை ஓராண்டுக்குள் இயற்ற வேண்டும். ஆனால், பல மாநிலங்கள் அதன்படி சட்டம் இயற்றவில்லை. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், 10-7-18க்குள் தமிழ்நாடு அரசு இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகளைத் தெரிவிக்கக் கோரி யிருந்தது. இந்நிலையில், 9.7.2018 அன்று அவசர அவசர மாக மசோதாவை சட்டசபையில் தாக்கல்செய்து, அன்றே போதிய விவாதம் ஏதுமின்றி தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றிவிட்டது எடப்பாடி அரசு. உச்ச நீதிமன்றம் 10.7.18-க்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. எனவே, மசோதாவைத் தாக்கல் செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தாலே போதும்.

ரகசிய மசோதா

மசோதாவை ரகசியமாக வைத்திருந்தது தமிழ்நாடு அரசு. சட்டம் இயற்றப்படுவற்கு முன் மக்கள் அமைப்புகளின் - குறிப்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள், சிவில் உரிமை அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள், வணிகர் மற்றும் தொழில் அமைப்புகள், கல்வி நிலையங்கள், தொழிற்சங்கங்கள் - கருத்துகள் வேண்டுமென்றே கேட்கப்படவில்லை. சட்டசபையிலும் விவாதம் நடை பெறவில்லை.

சட்ட மன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி, உரிய விவாதம் நடைபெற உத்தரவாதம் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப் படாததையொட்டி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் போதிய விவாதமின்றி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ஜனநாயக மாண்புகளுக்கு முற்றிலும் விரோதமானது.

லோக் ஆயுக்தா எப்போது?

தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கும் என்று சொல்கிறது. ஆனால், அதற்கான காலம் வரையறை செய்யப்படவில்லை. 2014 முதல் லோக்பால் சட்டம் அமலுக்கு வந்தாலும் , பாஜக மத்திய அரசு இதுநாள் வரை லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை.

லோக் ஆயுக்தா அமைப்பு என்பது தலைவர் ஒருவரின் கீழ், 4 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரோ அல்லது இருந்தவரோ தலைவராக இருப்பார். அப்படியின்றி, ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிர்வாகம், விழிப்புணர்வு, நிதி மற்றும் சட்டத் துறையில் 25 ஆண்டுகள் முன் அனுபவத்தைப் பெற்றுள்ள நபர்கூட தலைவராக இருக்கலாம். அதாவது, தலைவராக நியமிக்கப்படுபவர் அரசியல்வாதியாகவோ அல்லது அரசு அதிகாரியாகவோ இருக்கலாம்.

4 உறுப்பினர்களில் இருவர் நீதித் துறையைச் சார்ந்த உறுப்பினர்களாக இருக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவரோ, இருந்தவரோ அல்லது 25 ஆண்டுகள் மாநில நீதித் துறையில் சிறப்பான முறையில் பணியாற்றி முன்அனுபவம் பெற்றவரோ நீதித் துறையைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மற்ற இரு உறுப்பினர்கள், ஊழல் தடுப்புக் கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதி மற்றும் சட்டத்தில் 25 ஆண்டுகள் முன்அனு பவத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதாவது, அரசியல்வாதியோ, அரசு அதிகாரியோ உறுப்பினர்களாக இருக்கலாம்.

சுதந்திரமான அமைப்பு அல்ல

லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒரு தெரிவுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். அந்தத் தெரிவுக் குழுவின் தலைவர், முதலமைச்சர். அக்குழுவில் மற்ற இரு உறுப்பினர்கள் இருப்பர். அவர்களில் ஒருவர் சபாநாயகர். மற்றவர் எதிர்க்கட்சித் தலைவர். அதாவது, இக்குழுவின் பெரும்பான்மை ஆளும் கட்சியாக இருப்பதால், ஆளும் கட்சியின் விருப்பப்படி இந்த நியமனங்கள் இருக்கும். அதாவது, மாநில அரசின் மேலும் ஒரு துறைதான் லோக் ஆயுக்தா. இது ஒரு சுதந்திரமான துறை அல்ல.

தெரிவுக் குழுவில் நீதித் துறை முற்றிலுமாகப் புறக் கணிக்கப்பட்டுள்ளது. நீதித் துறை உறுப்பினர்கள் சிறப்பான முறையில் மாநில நீதித் துறையில் பணியாற்றினார்களா என்பதை, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைக் கேட்காமல் தெரிவுக் குழு எப்படி முடிவுசெய்யும்? அரசியல்வாதியையோ அல்லது அதிகாரி களையோ தலைவராக நியமித்துவிட்டு, நீதித் துறை உறுப்பினர்களை - உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட - அத்தகைய தலைவரின்கீழ் பணியாற்றும் ஒரு மோசமான நியமன முறைதான் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழலை விசாரணை செய்யும் அமைப்பாக லோக் ஆயுக்தா இருப்பதால், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் லோக் ஆயுக்தா உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் குழுவில் பெரும்பான்மையாக இருக்க வேண்டும்.

லோக் ஆயுக்தாவின் செயலாளரும் விசாரணை இயக்குநரும் அரசால் அனுப்பப்படும் பெயர்ப் பட்டியலிலிருந்து நியமிக்கப்படுகிறவர்கள்தான். இவர்கள் அரசின் துணைச் செயலாளர் நிலையில் இருப்பவர்களாக இருந்தாலே போதும். அரசு செய்யும் ஊழலை இவர்கள் வெளியில் கொண்டுவர முயல்வார்களா?

- து.அரிபரந்தாமன்,

நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம். சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x