

இந்தியாவின் முன்னணி வரலாற்றாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர் ராமச்சந்திர குஹா. ‘Speaking with Nature: The Origins of Indian Environmentalism’ (ஹார்பர் காலின்ஸ் வெளியீடு) நூலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழல் சீர்கேட்டின் ஆபத்துகள் குறித்து, இந்தியாவை மையமாகக் கொண்டு ஆழமான பார்வையுடன் சிந்தித்த 10 முன்னோடிச் சிந்தனையாளர்களை மையப்படுத்தி இந்த நூலை எழுதியுள்ளார். இந்தப் பின்னணியில் அவர் அளித்த நேர்காணல்:
இப்போது எந்த ஒரு சுற்றுச்சூழல் இயக்கமோ, போராட்டமோ பெரிய அளவில் இல்லை. வளர்ச்சிக்கு எதிர்நிலையாகச் சுற்றுச்சூழல் என்கிற வாதத்தில், வளர்ச்சிக்காக நாம் சமரசம் செய்துகொண்டுவிட்டோம் எனச் சொல்லலாமா? - வளர்ச்சியைச் சுற்றுச்சூழலுக்கு எதிராக முன்நிறுத்துவது ஒரு கற்பிதம். இலக்கியத்தில் இந்த இரண்டும் எதிர்மை நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தொழில் துறையினரும் அரசியல்வாதிகளும் இதை அடிக்கடி முன்னிறுத்தியிருக்கிறார்கள். இது அவர்களது அறியாமை. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதல் அவர்களுக்கு இல்லை, அத்துடன் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவர்கள் நினைப்பதால்தான் இப்படிக் கருதுகிறார்கள்.