

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகமாக்கி பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைப்பதற்கான தொலைநோக்கு பார்வையுடன் பல சலுகைகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை விண்ணைத் தொடும் நிலையில், இந்த வாகனங்கள் வெளியிடும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடும் சூழலில் மகாராஷ்டிரா அரசின் இந்த சலுகை அறிவிப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய ஒன்று.
வாகனப் புகையாலும் விவசாயிகள் எரிக்கும் கழிவுப் பொருட்களின் புகையாலும் டெல்லி மாநகரம் மூச்சுத் திணறுவதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பருவநிலை மாற்றங்கள் மட்டுமின்றி, போக்குவரத்தின் அசுரத்தனமான பெருக்கத்தாலும் சுற்றுச்சூழல் எல்லா நகரங்களிலுமே கடுமையாக மாசுபட்டு வருகிறது.
இந்நிலையில், புகை கக்காத, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை மேலும் மேலும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய கடமை மத்திய அரசுக்குமட்டுமல்ல, எல்லா மாநில அரசுகளுக்குமே இருக்கிறது. உபயோகிப்பதற்கு எளிதாக மாநிலம் முழுவதிலும் சார்ஜிங் மையங்கள் அமைப்பது குறித்து தெளிவான வாகனக் கொள்கையை மகாராஷ்டிரா அமைச்சரவை வகுத்துக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
மிக முக்கியமாக இந்த மின்வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுவதே மின்வாகன உபயோகத்தை மேலும் அதிகரிப்பதற்கான தொலைநோக்கு அணுகுமுறையாகும். எந்த ஒரு மாற்றம் வரும்போதும் சுயநலம் அல்லது அறியாமை காரணமாக அந்த மாற்றத்துக்கு எதிரான கருத்துகளை பொதுவெளியில் பரப்புவதும் தேவையற்ற பீதியை உருவாக்கி அத்தகைய மாற்றங்கள் நிகழவிடாமல் தடுப்பதும் காலம் காலமாக அரங்கேறும் விஷயம்தான். மின்வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிவதாகவும் அவை நீண்டதூர பயணத்துக்கு ஏற்றவை அல்ல என்ற கோணத்திலும் அவற்றின் பாதுகாப்பு அம்சம் குறித்த சந்தேகம் அடிக்கடி ஊடகங்கள் மூலம் எழுப்பப்படுவதை காணமுடிகிறது.
உண்மையிலேயே அவற்றில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தால் அவை தீப்பற்றி எரிவது குறித்து உண்மையான சரியான பார்வையை ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. இந்த மின்வாகனங்களில் எந்தவிதமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கொண்டுவரலாம் என்பது குறித்து தொடர்ந்து ஆராய்வதற்கு அரசாங்கமும் நிதி ஒதுக்க வேண்டியது அவசியம்.
அதைவிடுத்து, மின்வாகனங்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவை அல்ல என்ற நோக்கத்திலேயே தொடர்ந்து கருத்துகளை பரப்பி வருவது, இதன் பின்னால் வேறு யாருடைய தொழில் லாபம் குறித்த சிந்தனை இருக்கிறதோ என்ற எண்ணத்தை தான் ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல், எரிவாயு மூலமாக ஓடும் வாகனங்களை குறைப்பதனால் சுற்றுச்சூழல் மேம்படுவது மட்டுமல்ல, இந்த எரிபொருட்களுக்காக அந்நிய தேசங்களை நம்பியிருக்கும் சார்பு நிலையும் குறையும் என்பதே உண்மை.
எனவே, மாற்றத்துக்கு சிறந்த ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் மகாராஷ்டிரா அரசை மனம்திறந்து நாமெல்லாம் பாராட்டுவோம்!